இறைவார்த்தை

தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலாத்தியர் 5:22-23)

இறைவார்த்தை

நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்
(மத்தேயு 16:18-19)



இணைய நுழைவாயிலில் உங்களுடன் இயக்குனர்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.(மாற்கு 16:15) என்ற இறைமகன் இயேசுவின் கட்டளையினை ஏற்று அப்போஸ்தலர்களும் சீடர்களும் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். தொடர்பாடல் சாதனங்களோ தொழில்நுட்ப வளர்ச்சியோ அதிகமற்ற அந்த நாட்களில் அவர்கள் வாய்மொழியாகவும் திருமடல்கள் வழியாகவும் நற்செய்தியினை அறிவித்தனர்.

இத்திருமடல்கள் எல்லாம் கையெழுத்து பிரதிகளாகவே எழுதி அனுப்பப்பட்டன. பின்னர் தொழில் நுட்பம் படிப்படியாக வளர்ச்சியடைய நற்செய்தி பரப்பும் ஊடகமும் மாற்றமடைந்தது. மத்திய கால ஐரோப்பாவில் ஏற்பட்ட அச்சக துறையின் வளர்ச்சி, அதிக அளவில் நூல்களை அச்சடிக்க உதவியது. இவ் வளர்ச்சியின் மூலம் பல ஆன்மீக நூல்களும் அச்சேற்றப்பட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் பயன்படுத்தபட்டதோடு நற்செய்தியினை பரப்பவும் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வனொலியும் தொலைகாட்சியும் தொடர்பாடல் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை மாற்றியதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை முறையினையும் மாற்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதில் கண்டு பிடிக்கப்பட்ட இணையமானது, மனித வாழ்கையின் ஓர் அங்கமானது. உலகின் ஒரு முனையில் இருப்பவரோடு மறுமுனையில் இருப்பவர் உடனுக்குடன் தொடர்பு கொள்ளவும், செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் உதவுகின்றது.

எமது திருச்சபையின் முன்னால் திருத்தந்தை முக்திபேறுபெற்ற இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், நற்செய்தி பணிக்காக தொழில்நுட்ப வளர்சியினை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும் என முழு திருச்சபையினையும் ஊக்குவித்தார். இலங்கை தேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் வாழும் நாங்களும் எம்மை இணைக்கும் ஒரு பாலமாக ஆன்மீக வழிகாட்டியாக நற்செய்தியினை அறிவிக்கும் ஒரு மூலமாக இந்த இணையதளத்தினையும் பாவிப்போம்.

அருட்.பணி.அ.பெ.பெனற்
இயக்குனர்