திருவழிப்பாட்டு ஆண்டு A (124-08-2014)

இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். 
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' 
என்று உரைத்தார்/> இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். 
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' 
என்று உரைத்தார்/> இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். 
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' 
என்று உரைத்தார்/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! மெசியாவும், வாழும் கடவுளின் மகனுமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். மிகுதியான அருட்செல்வத்தைக் கொண்டிருக்கும் நம் ஆண்டவரின் பிரசன்னத்தில் ஒன்று கூடியுள்ளோம். நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் உங்கள் அனைவரையும்: பொதுக் காலம் இருபத்தோராம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம்.

இறைவனுடைய ஞானமும் அறிவும் ஆழமானவை, அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை, அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை, ஆண்டவரின் மனத்தை யாருமே அறிந்துகொள்ள முடியாது, அவருக்கு யாருமே அறிவுரையாளராய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்னும் ஆழமான உண்மைகள் இன்று நமக்குச் செய்தியாகத் தரப்படுகின்றன. எனவே இன்று நாம் நம்மையே தாழ்த்திக்கொண்டு, இந்த விடுமுறை தினங்களிலும், குறிப்பாக ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குச் செய்த, செய்துவரும் அனைத்து நன்மைகளையும் நினைந்து: 'ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்." என்னும் நன்றியுணர்வோடு தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23

உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.
திருப்பாடல் 138: 1-2. 2-3. 6,8

1 ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர். 8 ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி

இரண்டாம் வாசகம்

அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ``ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளாஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன: அவராலேயே உண்டாயின: அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நிறை வாழ்வை வாக்களிக்கும் அன்புத் தந்தையே இறைவா!

உமது பணியை முழுமையாக நிறைவேற்ற நீர் நியமித் திருக்கும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் ஒவ்வொருவரும் உம்மை எவ்வேளையிலும், தம் வாழ்வாலும், பணியாலும் மக்களுக்குப் பிரசன்னப்படுத்தி வாழ வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழும் கடவுளின் மகனான இயேசுவே,

நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை ஆண்டவராகவும், இறைமகனாகவும் அறிக்கையிடும் பேறுபெற்றவர்களாக எங்களையும் மாற்றினீரே. உமக்கு நன்றி. எங்கள் விசுவாச அறிக்கை செயல் வடிவில் மாற்றம் பெற அருள்தாரும். இந்த நாள் முழுதும் எனது ஒவ்வொரு செயலாலும் உம்மை என் ஆண்டவராக அறிக்கை இட அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மிகுதியான அருள் செல்வத்தையும், ஆழமான ஞானத்தையும், அறிவையும் கொண்ட வரான தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைத் தாழ்த்திக்கொண்டு உம்முடைய அருள் நலன்களிலும், ஞானத்திலும் நம்பிக்கை கொண்டு நேர்மையான மனத்தோடும், தியாக உள்ளத்தோடும் பணியாற்றுவதற்கு வேண்டிய ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவருக்கும் இரக்கம் காட்டு அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்கள் அனைவர்மீதும் உமது நிறை ஆசியை வழங்கி! அவர்களை உமது அன்பின் ஆழுகைக்குள் வைத்துக் காத்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)

கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார்.

தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.