பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (28-09-2014)

இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்/> இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்/> இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்/>


திருப்பலி முன்னுரை

இறையேசுவில் பிரியமுள்ள இறைத்தந்தைக்கும், இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம்.

நமக்கு நல் வழியைக் கற்பித்து, நம்மை நேரிய வழியில் நடாத்தும் நம் அன்புத் தந்தையின் திருப்பாதத்தில் அருள் ஆசீர் பெற ஒன்று கூடியுள்ளோம். பெருமைக்குரிய அத்தனையும் துறந்து தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, தம்மையே தாழ்த்தி, தந்தைக்குப் பணிந்து பிரமாணிக்கமாய் வாழ்ந்த இயேசுவின் வழியை நாமும் பின்பற்றி வாழ வேண்டும் என்னும் சிந்தனையும், நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு பிரமாணிக்கமாய் வாழவேண்டும் என்ற அறிவுறுத்தலும் இன்று நமக்கு ஆழமாக உணர்த்தப்படுகின்றன. ஆகவே நாம் அனைவரும் ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்: என்ற செபத்தை பொருள் உணர்ந்து செபித்து கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டு வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நேர்மையாளர் எனக்கூறிக் கொள்வோர் தவறிழைத்தால் அவர் வாழ்வை இழப்பார் என்றும்; பொல்லார் பின்னாளில் மனமாற்றம் பெற்று நல்லவராக வாழ்ந்தால் வாழ்வையடைவர் என்றும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. நாம் மனம் மாறி; கடவுளை நோக்கித் திரும்பி அவருடைய அருளைப் பெற்று என்றென்றும் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28

ஆண்டவர் கூறுவது: `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்
திருப்பாடல் 25: 4-5. 6-7. 8-9 (

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

ஒவ்வொருவரும் தாழ்ச்சியை மனதி்ல் கொண்டு, தன்னுடைய சுயநலத்தை விட்டுவிட்டு, பிறரைத் தன்னைவிட உயர்ந்தவராக எண்ணி, பொது நலத்துடன் வாழவேண்டும். எவ்வாறு தந்தையின் விருப்பப்படி நடக்க இயேசு தம்மையே முழுமையாகக் கையளித்தரோ, அதுப்போல நாமும் நம்மைத் தாழ்ச்சியோடும் அன்போடும் கையளித்தால், கடவுளின் மாட்சிமையில் நாம் பங்கேற்போம் என்று இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. தாழ்மையுடன் நம்மை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, அவரது அருளின் மக்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றனஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு கூறியது: ``இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் ``மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ``வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல் வழியைக் கற்பித்து, நேரிய வழியில் நடாத்தும் அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை அவர்களும் கொண்டு, தமது பணிப்பொறுப்புக்களில் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உண்மையின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சொல்லுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எப்போதும்; இறைத்தந்தைக்குப் பிரியமானவர்களாக வாழும் அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே இறைவா!

மக்கள் அனைவரும் தீமைக்கும், தீயவர்களுக்கும், அநீதிக்கும், வன்முறைக்கும் துணைபோகின்ற மனநிலையை விட்டொழித்து: உமது குரலுக்குச் செவிசாய்த்து நீர் காட்டும் வழியைப் பின்பற்றி உலக அமைதிக்காக உழைக்கின்ற மன நிலையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மை நேரிய வழியில் நடாத்தும் தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் இயேசுவைப் போல பெருமைக்குரிய அத்தனையும் துறந்து, எம்மையே தாழ்த்தி, தந்தைக்குப் பணிந்து பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)

ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.

இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.