யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-03-27


முதல் வாசகம்

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்
எரேமியா நூலிலிருந்து வாசகம் 20:10-13

10 சுற்றிலும் ஒரே திகில்! என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்: பழிசுமத்துங்கள்: வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம் என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்: ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்: நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த11 ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை: அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.12 படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே: நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்: ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.13 ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்
திருப்பாடல்கள் 18:2-7

2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.

7 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:31-42

31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.32 இயேசு அவர்களைப் பார்த்து, ' தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்? ' என்று கேட்டார்.33 யூதர்கள் மறுமொழியாக, ' நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய் ' என்றார்கள்.34 இயேசு அவர்களைப் பார்த்து, ' ″ நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன் ″ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ″ இறை மகன் ″ என்று சொல்லிக் கொண்டதற்காக ' இறைவனைப் பழித்துரைக்கிறாய் ' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள் ' என்றார்.39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், ' யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று ' எனப் பேசிக்கொண்டனர்.42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னை அனுப்பியவர் உண்மையானவர்... நான் அவரிடமிருந்து வருகிறேன்' என்றார்'' (யோவான் 7:28-29)

இயேசுவை நாம் புரிந்துகொள்வதற்கு நான்கு நற்செய்தியாளர்கள் பல தகவல்களைத் தருகின்றனர். குறிப்பாக யோவான் நற்செய்தியாளர் இயேசு தம்மைப் பற்றி யூதர்களுக்கு விளக்கிக் கூறியதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தங்களை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிடுத்து, தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி நீதியோடு ஆட்சிபுரிவதற்கு ஒரு மெசியா வருவார் என்னும் எதிர்பார்ப்பு யூதர்கள் நடுவே மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. அதிகாரத்தோடும் படைபலத்தோடும் மெசியா வருவார் என்றும், அவரே உரோமையரின் ஆட்சியை முறியடிப்பார் என்றும் மக்கள்நடுவே எதிர்பார்ப்பு இருந்தது. இப்பின்னணியில் இயேசு தாம் கடவுளிடமிருந்து வருவதாக அறிவிக்கின்றார். இதை ஏற்க மறுக்கின்றனர் பல யூதர்கள். எனவே, இயேசு அவர்களைப் பார்த்து, ''நான் கடவுளிடமிருந்து வருகிறேன்'' என்று கூறியதோடு அதே கடவுளின் வல்லமையோடு தாம் அரும்செயல்கள் ஆற்றுவதாகவும் உரைக்கின்றார்.

இயேசு உண்மையிலேயே கடவுள்தானா என்னும் கேள்வி அன்று எழுந்ததுபோல இன்றும் எழுகின்றது. கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, இயேசு கடவுளிடமிருந்து வருகிறவர்; ஏன், இயேசு கடவுளின் ''மகன்''. ஆகவே, இயேசு தம்மைக் கடவுளுக்கு ஒப்பிட்டுப் பேசியபோதும் தாம் கடவுளால் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதைப் புரிந்துகொள்ள பல யூதர் தயக்கம் காட்டினார்கள். ஏனென்றால் அவர்களது சமய நம்பிக்கைப்படி எந்த மனிதரும் தம்மைக் கடவுளுக்கு நிகராகக் கருதமுடியாது. ஆனால் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவோ தம்மைக் கடவுளுக்கு நிகரானவராகக் காட்டினார். எனவே பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இன்றைய உலகில் வாழ்கின்ற நாம் இயேசுவின் வரலாற்றை அறிந்து, அவருடைய சொற்களை ஏற்று, அவர்மீது நம்பிக்கை கொள்வதற்கு முன்வருகிறோம். ஆனால் இந்நம்பிக்கை நம்மில் இயல்பாகத் தோன்றுகின்ற மனநிலை அல்ல. நம்பிக்கை என்பது கடவுள் நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. அதை நன்றியோடு ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியருளும்.