யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் சனிக்கிழமை
2015-11-28




முதல் வாசகம்

ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27

தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, `இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழிஊழிக்காலமும் கொண்டிருப்பர். அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றை விடப் பெரிதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்ற இருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்; அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.
தானி (இ) 1: 59-60. 61-62. 63-64

மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 60 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

61 ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 62 ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

63 நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 64 தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மேலும் இயேசு, 'உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு...எச்சரிக்கையாயிருங்கள்' என்றார்'' (லூக்கா 21:34-35)

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் தவிர்க்க முடியாத நாளாக இருப்பது நம் இறுதி நாள் ஆகும். அன்று நம் மண்ணுலக வாழ்க்கை முடிவுக்கு வரும். அந்த நாள் என்று வரும் என யாருமே முன்கூட்டி அறிய இயலாது. நிலைமை இவ்வாறிருக்க, நாம் சில சமயங்களில் நம் வாழ்வின் இறுதி பற்றி யாதொரு கரிசனையுமின்றி இருந்துவிடுகிறோம். இது குறித்து இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்: ''உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்'' (லூக் 21:34-35). இந்த எச்சரிக்கையை நாம் கவனமாகப் பார்த்தால் அதில் நாம் ''மந்தம் அடையாதவாறு'' எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மந்தம் என்பது விழிப்பற்ற நிலையைக் குறிக்கும். குடிவெறியும் களியாட்டமும் இவ்வுலகக் கவலையும் மந்த நிலையை உருவாக்குகின்றன. குடிபோதையில் இருப்போர் தம்மைச் சூழ்ந்து நடப்பவற்றைச் சரியாக உணரமாட்டார்கள். தெளிவற்ற மனத்தோடு உளறிக்கொண்டிருப்பார்கள். அதுபோல, களியாட்டத்தில் ஈடுபடுவோரும் தம் உள்ளத்தை ஒருமுனைப்படுத்தி சிந்தனையைக் கூர்மையாக வைத்திருக்கமாட்டார்கள். மேலும் உலகக் கவலைகள் நம் உள்ளத்தை அலைக்கழிக்கும் போது அங்கே மன அமைதி இராது. இவ்வாறு நம் உள்ளம் மந்தமாகிப் போகின்ற ஆபத்து உள்ளது.

இயேசு இத்தகைய மந்த நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் எனக் கேட்கின்றார். இன்று நம்மை மந்த நிலையில் வைத்திருக்கின்ற சூழ்நிலைகள் என்ன? இறையாட்சி பற்றிய விழிப்பு நமக்கு ஏற்படாமல் நம்மைச் சிறைப்படுத்துகின்ற நெருக்கடிகள் யாவை? கண்ணயர்ந்துபோய் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்து போகாமல் நம் அகக் கண்களை அகலத் திறந்துவைக்க நமக்குக் கடவுள் தருகின்ற தூண்டுதல் யாது? இதற்கு இயேசு பதில் தருகின்றார்: ''எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' (லூக் 21:36). விழிப்பு, மன்றாட்டு இரண்டுமே நமக்குத் தேவை. இயேசுவே நமக்கு முன்னுதாரணம் தருகின்றார். அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து ''விழித்திருந்தார்''. அதுபோல, எப்போதும் இறைவேண்டல் செய்வதில் நிலைத்திருந்தார் (காண்க: லூக் 22:39-42). மனித வாழ்வின் நிறைவு கடவுள் நமக்குத் தருகின்ற வாக்குறுதி. அந்நிறைவை அடைய வேண்டும் என்றால் நமக்கு விழிப்புத் தேவை; நம் உள்ளம் மந்த நிலையிலிருந்து விடுபட்டு இறையுணர்வில் தோய்ந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம் உடனிருப்பை உணர்ந்து உம்மையே கருத்தில் கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.