யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-09-17

(இன்றைய வாசகங்கள்: சீராக் ஞானநூலிலிருந்து வாசகம்: சிஞா.27:30-28:1-9,திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14:7-9 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 18:21-35)




ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு.

மன்னிப்பு என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் நமக்கு சங்கடமாக இருக்கிறது. ஒரு சிலரை மட்டும் நம்மால் மன்னிக்கவே முடிவதில்லை, எவ்வளவு முயற்சி செய்தாலும். மன்னிக்கவே முடியாது என்று தோன்றும்போதெல்லாம், நாம் நினைவில் கொள்ளவேண்டிய உவமையை ஆண்டவர் இயேசு இன்று நமக்குத் தந்திருக்கிறார். நாம் பிறரை மன்னிப்பதற்கும், இறைவன் நம்மை மன்னிப்பதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும், மடுவுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என்பதை உணர்ந்தாலே நாம் வெட்கத்தால் தலை குனிந்துவிடுவோம்.

நமது பாவங்களை, குற்றங்களை இறைவன் நாள்தோறும் மன்னிக்கின்றார். எந்த நிபந்தனையும் இன்றி நம்மை ஏற்றுக்கொள்கின்றார். சில பாவங்களை மீண்டும், மீண்டும் நாம் செய்கின்றோம். ஆனால், இறைவன் ஒவ்வொரு முறையும் நம்மை மன்னிக்கின்றார், அரவணைக்கின்றார், அன்பு செய்கின்றார், தொடர்ந்து நம்மை ஆசிர்வதித்து வருகின்றார். இறைவனின் மன்னிக்கும் பேரன்புக்கு முன்னால் நமது மன்னிக்கும் பெருந்தன்மை ஒரு தூசி போன்றது. இதை உணர்ந்து, நமக்குத் துன்பம் தரும் எவரையும் மன்னிக்க முன் வருவோமா? இயேசுவோடு சேர்ந்து பயணிக்க வரம் வேண்டித் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர்.
சீராக் ஞானநூலிலிருந்து வாசகம்: சிஞா.27:30-28:1-9

வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை: பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள். பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு: அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்: அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை: அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேடமுடியும்? உன் முடிவை நினைத்துப்பார்: பகைமையை அகற்று: அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்: கட்டளைகளில் நிலைத்திரு.கட்டளைகளை நினைவில் கொள்: அடுத்தவர்மீது சினங் கொள்ளாதே: உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை: குற்றங்களைப் பொருட்படுத்தாதே. பூசலைத் தவிர்த்திடு: உன் பாவங்கள் குறையும். சீற்றங்கொள்வோர் சண்டையை மூட்டிவிடுகின்றனர். பாவிகள் நட்பைக் கலைக்கிறார்கள்: பிணக்கை விதைக்கிறார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14:7-9

நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை: தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்: இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர் மீதும் வாழ்வோர் மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 18:21-35

பின்பு பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழுமுறை மட்டுமல்ல: எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க: எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க: நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே எம் இறைவா!

உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2. மன்னிப்பின் ஊற்றான இயேசுவே,

ஒவ்வொரு நாளும் உமது மன்னிப்பின் பேரன்பை நான் அனுபவிக்கின்றேன். உமது இரக்கத்தை உணர்கின்றேன். உமக்கு நன்றி கூறுகிறேன்.. மண்ணிலிருந்து விண் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு நீர் எங்கள் பாவங்களை எங்களிடமிருந்து அகற்றி விடுகின்றீர். உமது மன்னிக்கும் பேரன்பை அனுபவிக்கும் நாங்களும் பிறரை மன்னித்து மகிழும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

3. அன்புத் தந்தையே எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான அர்த்ததோடும், அன்பான மனநிலையோடு கூறி எங்கள் குடும்ப உறவுகளை மேன்மை படுத்தி தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. சமூக மாற்றத்தின் நாயகனே எம் இறைவா!

நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

5.அருள்கொடையின் நாயகனே எம் இறைவா!

இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

6. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

7. ஆதரித்தாளும் எம் இறைவா,

எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?'' (மத்தேயு 18:21)

மன்னிப்பு என்பது எளிதில் நிகழும் காரியம் அல்ல. சாதாரண மனித இயல்பைப் பார்த்தால் நமக்கு எதிராக யாராவது தீங்கிழைக்கும் வேளையில் அவர்ளை உடனடியாகத் தண்டிக்கத்தான் மனம் வரும்; அல்லது பழிக்குப் பழி என்னும் எண்ணம் நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழுகின்ற, எழக் கூடுமான கேள்வியே என்றால் மிகையாகாது. எத்தனை முறை மன்னிப்பது என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு வழங்கிய பதில் என்ன? ''ஏழுமுறை மட்டும் மன்னித்தால் போதாது; ஏழுபது தடவை ஏழுமுறை நீ மன்னிக்க வேண்டும்'' (காண்க: மத் 18:23). இதை விளக்கிட இயேசு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். மிகப் பெரிய தொகையைக் கடனாக வாங்கிய ஒருவருடைய முழுக்கடனும் மன்னிக்கப்பட்டது. ஆனால் அவரோ தன்னிடமிருந்து மிகச் சிறிய தொகை கடனாகப் பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார். பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளும் நமக்கு மன்னிப்பு அருளமாட்டார் என இயேசு இக்கதை வழி நமக்குப் போதிக்கிறார் (மத் 18:21-35).

மன்னிப்பு அன்பின் உயரிய வெளிப்பாடு. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்ய விரும்புவது இயல்பு. ஆனால் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்வது கடினமான செயல். நம் உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால்தான் நாம் பிறரை மன்னிக்க முன்வருவோம். கடவுள் நம் பாவங்களையும் குற்றங்களையும் மன்னிக்கிறார். ஆனால், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்க மறுத்தால் கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது முரண்பாடாகத்தானே இருக்கும்! கடவுளிடம் மன்னிப்புக் கேட்போர் பிறரையும் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது இயேசு பேதுருவுக்கு வழங்கிய பதில் நமக்கும் பொருத்தமாக அமையும். அதாவது எத்தனை தடவை மன்னிப்பது என நாம் விரல்விட்டு எண்ணிப் பார்க்காமல் எப்போதெல்லாம் பிறர் நமக்குத் தீங்கு இழைக்கின்றனரோ அப்போதெல்லாம் மனமுவந்து மன்னித்திட முன்வர வேண்டும். இத்தகைய தாராள மனம் இயேசுவிடம் இருந்தது. சிலுவையில் தொங்கிய வேளையிலும் அவர், ''தந்தையே, இவர்களை மன்னியும்'' (லூக்கா 23:34) என்று மன்றாடியதுபோல நாமும் உளமார மன்னிப்போம்.

மன்றாட்டு:

இறைவா, மன்னிக்கும் மனப்பான்மை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.