யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2017-09-30




முதல் வாசகம்

இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,10-11

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். `எங்கே போகிறீர்?' என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், `எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்' என்றார். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: `எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார் ஆண்டவர். `மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
எரே 31: 10. 11-12. 13

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். - பல்லவி

11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்'' (லூக்கா 9:43)

இயேசு பல புதுமைகள் செய்து மக்களின் பிணிகளைப் போக்கினார்; அவர்களுக்கு நலம் கொணர்ந்தார். அதே பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொறுப்பையும் அதற்கான வல்லமையையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார் (காண்க: லூக் 9:1-6). வலிப்பு நோய்க்கு ஆளான ஒரு சிறுவனை இயேசுவின் சீடர்களால் குணப்படுத்த இயலவில்லை. ஆனால் இயேசு அச்சிறுவனின் பிணியை நீக்கி அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார் (லூக் 9:37-42). இந்த அதிசயம் மக்களின் கண்முன்னால் நிகழ்ந்ததும் ''அவர்கள் எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துநின்றார்கள்'' என லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:43அ). இயேசு புரிந்த அதிசய செயல்கள் மக்களிடையேயும் சீடர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தின (லூக் 9:43ஆ). மலைப்பும் வியப்பும் எல்லாரையும் ஆட்கொண்டதைக் குறிப்பிட்ட உடனேயே, இயேசு தாம் துன்புறப்போவதாக இன்னுமொரு முறை முன்னறிவித்தது பற்றி லூக்கா பேசுகிறார். தீய சக்திகளை அடக்குகின்ற அதிகாரம் இயேசுவுக்கு இருக்கிறது; மக்களின் பிணி போக்குகின்ற வல்லமையும் அவரிடம் உண்டு. ஆனால் இத்தகு வல்லமை கொண்டவர் ''மக்களின் கைககளில் ஒப்புவிக்கப்பட்டு'' துன்பங்களை அனுபவிப்பார் (லூக் 9:44).

இயேசுவின் சீடர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது இன்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கடவுளின் வல்லமையால் மக்களுக்கு வாழ்வளிக்க வந்த இயேசு தம் உயிரையே நமக்காகக் கையளிக்கின்றார். தீய சக்திகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த இயேசு தீயோரின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றார். இதுவே ''சிலுவையின் முரண்பாடு'' என அழைக்கப்படுகிறது. கடவுளின் வல்லமை துலங்குவது அதிகாரத்தின் வழியாகவோ, அடக்கி ஆளுவதன் வழியாகவோ அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை அவர் நமக்காகத் தம்மையே காணிக்கையாக்குவதில் துலங்குகிறது. அக்காணிக்கையின் உச்சக் கட்டம் தான் இயேசுவின் சிலுவைச் சாவு. இயேசு தாம் துன்புற்று இறக்கப் போவதை அறிவித்ததும் சீடர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவருக்கு இத்தகைய இழிநிலை ஏற்படக் கூடாது என்று கூறிப் பார்த்தார்கள். அதே நேரத்தில் ''அவர் சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்'' (லூக் 9:45). ஏன் இந்த அச்சம்? தம் குருவாக, ஆசிரியராக விளங்கிய இயேசுவுக்கு எத்தீங்கும் ஏற்படக் கூடாது என அவர்கள் நினைத்ததால் எழுந்தது இந்த அச்சமா அல்லது குருவின் நிலையே சீடனின் நிலையாக மாறிவிடுமோ என்ற அச்சமா? எவ்வாறாயினும், இயேசு கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்தும்போது அந்த அன்பு தன்னையே நமக்குப் பலியாகத் தருகின்ற அன்பு என்பதை வெளிப்படுத்துகிறார். தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி தருகின்ற மெழுகு திரி போன்றது கடவுளின் அன்பு. அதே அன்பு நம் வாழ்விலும் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமை மிக்க செயல்களைக் கண்டு வியந்து நிற்கும் நாங்கள் எங்களையே உமக்குப் பலியாக அளித்திட அருள்தாரும்.