யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் திங்கட்கிழமை
2017-11-06




முதல் வாசகம்

அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ``ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.
திருப்பாடல்கள் 69: 29-30. 32-33. 35-36

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மதிப்புப் பெறுதல் !

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம். ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார்.

மன்றாட்டு:

தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை நாங்கள் எதிர்பார்க்காமல், பிறருக்கு நாங்கள் வழங்குகின்ற நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.