யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் திங்கட்கிழமை
2017-11-13




முதல் வாசகம்

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார். நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும். ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றும் உள்ள வழியில் என்னை நடத்தும் ஆண்டவரே.
திருப்பாடல்கள் 139: 1-3. 3-6. 7-8. 9-10

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர். -பல்லவி

3 என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. 4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர். 5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். 6 என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! -பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.'' திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ``எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: ``கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''திருத்தூதர்கள் ஆண்டவரிடம், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று கேட்டார்கள்'' (லூக்கா 17:5)

''நம்பிக்கை'' என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஏதாவது ஒரு பொருள்பற்றிக் கருத்துத் தெரிவித்தல் ''நம்பிக்கை'' எனக் கொள்ளப்படலாம். நாம் ஒரு கருத்துத் தெரிவிக்கும்போது, வேறு மனிதர் வேறு கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என ஏற்றுக்கொள்கிறோம். நாம் உண்மை என ஏற்பதையும் ''நம்பிக்கை'' எனலாம். இப்பொருளில் ''சமய நம்பிக்கை'' பற்றிப் பேசுகிறோம். இதற்கு நேர்மாறாக ''மூட நம்பிக்கை'' இருக்கிறது. அதாவது நாம் உறுதியாக ஏற்கின்ற ஒரு கருத்துக்கு உண்மையான ஆதாரம் இல்லை என்பது இதன் பொருள். இவை தவிர, நம்பிக்கை என்றால் ''எதிர்காலத்தில் நிகழவிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி குறித்து நாம் தெரிவிக்கின்ற எதிர்பார்ப்பு'' என்றும் பொருள்படலாம். நாளை மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஒருவர் கூறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, சீடர்கள் இயேசுவிடம் ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' (லூக்கா 17:5) என்று விடுத்த வேண்டுகோளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இங்கே ''நம்பிக்கை'' என வருகின்ற சொல் பழைய விவிலியத் தமிழ் பெயர்ப்பில் ''விசுவாசம்'' என்றிருந்தது. விசுவாசம் என்பது வடமொழி என்பதால் அதை நல்ல தமிழில் ''நம்பிக்கை'' என்று கூறுகிறோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை'' என்பது ஆழ்ந்த பொருள் கொண்டது. இதன் முதல் பொருள் ''கடவுளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வது'' என்பதாகும். கடவுள் தம்மையே நமக்கு இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாலும், அந்த வெளிப்பாட்டின் வழியாகக் கடவுள் நம்மோடு உரையாடுகிறார் என்பதாலும், நாம் கடவுளோடு உறவாட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் ''ஆம்'' என்று பதிலளிக்கும்போது நாம் கடவுளிடத்தில் நம் ''நம்பிக்கை''யை வெளிப்படுத்துகின்றோம். எனவே நம்பிக்கை என்பதற்குப் ''பற்றுறுதி'' என்னும் பொருள் உண்டு. கடவுளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது கடவுள் தம் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார் என்றும், அவர் நம்மைக் கைவிடார் என்றும் நாம் உறுதியாக ஏற்கிறோம். இதுவும் நம்பிக்கையின் பொருள்ஆகும். இங்கே நம்பிக்கையோடு ''எதிர்நோக்கல்'' இணைந்திருப்பதைப் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை''யும் ''எதிர்நோக்கும்'' மிக நெருங்கிய விதத்தில் பிணைந்தவை. அவற்றோடு ''அன்பு'' என்னும் பண்பையும் நாம் சேர்த்தால் இம்மூன்றும் கடவுளோடு நமக்கு உறவு ஏற்படுத்துகின்ற வழிகளாக மாறுவதை நாம் பார்க்கலாம். இதைத் தூய பவுல் அழகாக எடுத்துரைக்கிறார்: ''ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது'' (1 கொரிந்தியர் 13:13). எனவே, திருத்தூதர்கள் இயேசுவிடம், ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று எழுப்பிய வேண்டுதல் நமது வேண்டுதலாகவும் மாறவேண்டும். நம் வாழ்க்கையில் ''நம்பிக்கை'' ஆழ வேரூயஅp;ன்றினால் நாம் கடவுளிடம் கொள்கின்ற பற்று உறுதியாக இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களோடு என்றும் வாழ்கின்றீர் என்னும் நம்பிக்கையை எங்களில் வளர்த்தருளும்.