யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-11-24

புனித பெலிக்ஸ்




முதல் வாசகம்

புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், ``நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்'' என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள். மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே
1 குறி 29: 10-12

10 எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி

11ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

11உன ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீ செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

12 நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்'' (லூக்கா 19:45)

கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டது கோவில். அங்கே கடவுளை வழிபடுவதற்காக மனிதர் போகின்றார்கள். இயேசுவின் காலத்தில் யூத மக்களுக்கென்று அமைந்த மைய வழிபாட்டு இடம் எருசலேம் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன் தாவீது அரசர் எருசலேமைத் தன் தலைநகராக்கிக் கொண்டார். அங்கே தாவீதின் மகன் சாலமோன் எழில்மிகு கோவிலைக் கட்டியெழுப்பினார். அக்கோவில் யூத மக்களின் உயிர்நாடி போல அமைந்தது. அன்னிய படையெடுப்புக் காரணமாக அக்கோவில் அழிந்தது. பின்னர் பெரிய ஏரோது மன்னன் எருசலேம் கோவிலைப் புதிதாகக் கட்டினான். அதன் அழகையும் சிறப்பையும் குறித்து மக்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் இயேசுவின் காலத்தில் கோவில் வழிபாட்டில் சில சீர்கேடுகள் நுழைந்துவிட்டிருந்தன. அவற்றுள் ஒன்றுதான் கோவில் ஓர் சந்தை வெளி போல மாறிய முறைகேடு. பரந்து விரிந்த எருசலேம் கோவிலில் பல முற்றங்கள் இருந்தன. வெளி முற்றம் ''புற இனத்தார் முற்றம்'' என அழைக்கப்பட்டது. அங்கே யூதரும் பிற இனத்தாரும் கலந்து பழகினர். அங்குதான் வியாபாரம் மும்முரமாக நடந்துவந்தது. கோவிலுக்கு வந்த திருப்பயணியர் பலி செலுத்தத் தேவையான பொருட்களை அந்த வெளிமுற்றத்தில் வாங்குவர். காணிக்கை செலுத்துவதற்கும் பலிப்பொருட்களை வாங்குவதற்கும் தேவையான யூத நாணயம் பெறுவதற்காக மக்கள் தங்களிடமிருந்து பிற இன (கிரேக்க, உரோமைய) நாணயத்தை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு பலிப்பொருட்களையும் காணிக்கையையும் எடுத்துக்கொண்டு யூதர்கள் அடுத்த முற்றத்திற்குச் செல்வர். ''பெண்கள் முற்றம்'' வந்ததும் பெண்கள் அதற்கு மேல் போக அனுமதி மறுக்கப்பட்டது. யூத ஆண்கள் ''இஸ்ரயேலர் முற்றம்'' என்னும் இடம் வரை போகலாம். அதன் பிறகு வருவது கோவில் திரு உறைவிடம். அங்கே யூத குருக்கள் பலி ஒப்புக்கொடுப்பர். கோவிலின் மையப்பகுதியாக அமைந்தது ''திருத்தூயகம்'' என அழைக்கப்பட்டது. அங்குக் கடவுளின் பிரசன்னம் இருந்தது என்பது யூத சமய நம்பிக்கை. அங்கு தலைமைக் குரு மட்டுமே நுழைய முடியும். அதுவும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தலைமைக் குரு திருத்தூயகத்தினுள் நுழைந்து மக்களுக்குப் பாவ மன்னிப்பு இறைஞ்சி பலிப்பொருள் இரத்தத்தைக் கொண்டுபோய்ப் படைப்பார். -- திருத்தலங்கள் வியாபாரக் கூடங்களாக மாற்றப்படுவது இன்று மட்டுமல்ல, இயேசுவின் காலத்திலும் நடந்தது என நாம் அறிகிறோம். ஆனால் இயேசு கடவுளின் இல்லத்தில் வியாபார நோக்கு நுழைவது சரியல்ல எனக் காட்டினார். பலி ஒப்புக்கொடுப்பதற்குத் தேவையான சாம்பிராணி, எண்ணெய், தானியம், விலங்குகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தவர்களும், நாணய மாற்றம் நிகழ்த்தியவர்களும் கோவிலுக்கும் கோவில் குருக்களுக்கும் பெரிய தொகை கொடுத்திருப்பார்கள். ஆக, கோவிலை மையமாக வைத்து ஏழைகள் சுறண்டப்பட்டார்கள். எனவே, இயேசு ''கோவிலைத் தூய்மையாக்கிய நிகழ்ச்சி'' சமூக அநீதியை இயேசு கடிந்துகொண்டதன் அடையாளமாகவும் புரிந்துகொள்ளப்படலாம். இங்கே இயேசு நமக்கொரு பாடம் புகட்டுகின்றார்.

மன்றாட்டு:

இறைவா, தூய்மையான உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.