புதன் திருப்பலி - திருநீற்றுப் புதன்

இரண்டாம் ஆண்டு 22-02-2012


“மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே”



திருப்பலி முன்னுரை


அன்புமிக்க சகோதர சகோதரிகளே!!
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்: மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக. இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று திருநீற்றுப் புதன். இயேசுவின் நாற்பது நாட்கள் பாலைவன அனுபவத்தை நினைவுகூர்வதோடு, அவருடைய பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சிக்குள் இட்டுச் செல்லும் தவக்காலத்தை இன்று நாம் ஆரம்பிக்கின்றோம்;. எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன். இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ? உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கப்படுகின்றன. தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம். பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது. தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம். இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது. ஆகவே நாம் அனைவரும் உண்மையான நோன்பு இருந்து, மனமாற்றம் பெற்று, ஒப்புரவாகி, பயனுள்ள விதத்திலே பாஸ்காப் பெருவிழாவைக் கொண்டாட அருள்வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.


முதல் வாசகம்


முதலாம் வாசக முன்னுரை:வாசகம் யோவேல் 2:12-18
நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்:


யோவேல் நூலிலிருந்து முதலாம் வாசகம் (யோவேல் 2:12-18)

12 ;இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; என்கிறார் ஆண்டவர். 13 ;நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். ; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். 14 ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? 15 சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். 16 மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும். 17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ;ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர் எனச் சொல்வார்களாக! ;அவர்களுடைய கடவுள் எங்கே? ; என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? 18 அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 51:1-6 12-14

பல்லவி: ஆண்டவரே இரக்கமாயிரும் ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். பல்லவி
2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; பல்லவி
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. பல்லவி

4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். பல்லவி

5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். பல்லவி

6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். பல்லவி

13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். பல்லவி

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி



இரண்டாம் வாசகம்


இரண்டாம் வாசகம் 2கொரி. 5:20 - 6:1-2
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்: இதுவே தகுந்த காலம். என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5:20-6:1-2

எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி மத்தேயு 6:1-6, 16-18
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்: மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:1-6, 16-18

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது! "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யா தீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது". நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேட க்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்: மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண் டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டு ங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக் குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது: மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா உமது அருட்பணியைத் தொடர்ந்தாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நீர் தூய ஆவியின் கொடைகாளால் நிரப்பி, அவர்களை வலுப்படுத்தி, அவர்கள் அனைவரும் தங்களுக்குசச் சவாலாக அமையும் பாவச் சோதனைகளை வென்று புனிதமிக்கவர் களாகவும், நற்செய்தியை சிறப்பாக பறைசாற்றும் மாபெரும் சக்திகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவரான தந்தையே நாங்கள் ஒவ்வொருவரும் உண்மையான நோன்பு இருந்து, மனமாற்றம் பெற்று, ஒப்புரவாகி, உம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்காது பயனுள்ள விதத்திலே பாஸ்காப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தகுந்த வேளையில்; எமக்குப் பதிலளித்து: விடுதலை நாளில் எமக்குத் துணையாய் இருக்கும் தெய்வமே இறைவா! இத்தவக்காலத்தை எமக்குக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி சொல்லுகின்றோம்.இக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் தவமுயற்சிகள் அர்த்தமுள்ளவையாக அமையவும், இத் தவக்காலத்தை நாம் புனிதமாகக் கடைப் பிடிக்கவும், உம்மோடு சேர்ந்து நாம் பயணிக்கவும் எமக்கு அருள் அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தந்தையே இறைவா! நோயினாலும், இயலாமையினாலும், கவலையினாலும் இன்னும் பல்வேறு காரணங்களாலும்; இன்றைய இத் திருப்பலியில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் உமது அருள் பிரசன்னத்தைப் பொழிந்து, அவர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, எல்லாவித சுமைகளிலிருந்தும் அவர்களை விடுவித்து, நீர் அளிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் நிறைவாகப் பெற்றிட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவரான தந்தையே! நாங்கள் எங்கள் கடின இதய செயற்பாடுகளைக் கைவிட்டு உமது கட்டளைக்கு அமைந்து பணிந்து நடப்பதற்கு வேண்டிய ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

சிந்தனை:

உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம். கொஞ்ச நேரம் கண்ணை மூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம். ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டுவோம். ஆண்வரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும். ஆண்டவர் எங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.