தவக்காலம் முதல் வாரம்

வியாழன் மார்ச், 01.03.2012


முதல் வாசகம்


"நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்,
இறைவாக்கினர் எஸ்தர் நூலிலிருந்து வாசகம் 4:12.14-16.23-25.

1 இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார். 2 அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார். 3 மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர். 4 எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. 5 எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார். 6 அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார். 7 மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார். 8 மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அவர் மன்னனிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினர். 9 அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார். 10 எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாக மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது; 11 மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும்மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்; இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர் 12 அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 138:1-3 7-8

பல்லவி: ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.

1 4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! 6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். 7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்." அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7:7-12

''தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்க நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!' என்றார்'' (லூக்கா 11:13)

7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். 8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? 10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? 11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! 12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்க நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!' என்றார்'' (லூக்கா 11:13)

இயேசுவின் அன்புக்குரியவரே!
இறைவேண்டல் கிறிஸ்தவ வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இயேசு இறைவேண்டல் பற்றி அளித்த போதனைகளையும், தாமே இறைவேண்டலில் பல முறை நேரம் செலவிட்டதையும் லூக்கா பதிவுசெய்துள்ளார். பிள்ளைகள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு நல்லது செய்யவே பெற்றோர் விரும்புவர். அதுபோல, கடவுளை நாம் அண்டிச் சென்று நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். கடவுளிடம் நாம் கேட்பவை எல்லாம் எப்போதும் நாம் கேட்டபடியே கிடைத்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் கடவுள் நமக்குத் தம் நற்கொடைகளையே தருவார் என்பது மட்டும் உறுதி. நாம் கடவுளிடம் கேட்பது நமக்குக் கைகூடாவிட்டாலும் ஒன்று மட்டும் உறுதியாக நமக்கு அளிக்கப்படும். அந்த நற்கொடையின் பெயர் ''தூய ஆவி''. இயேசுவே இதைத் தெளிவாகப் போதித்துள்ளார்: ''விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பார்'' (காண்க: லூக் 11:13). இது நமக்குச் சிறிது வியப்பாக இருக்கலாம். நாம் கேட்கும் மன்றாட்டு எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குத் ''தூய ஆவியை''க் கொடுப்பார் என்பதன் பொருள் என்ன? தூய ஆவி என்பது கடவுளிடமிருந்து நமக்கு வழங்கப்படுகின்ற கொடை. கடவுள் நம்மோடு தங்கியிருந்து நம்மை அன்போடு வழிநடத்துகிறார் என்பதற்கு அவர் நமக்கு வழங்குகின்ற தூய ஆவியே சான்று. கடவுளிடமிருந்து வருபவர் தூய ஆவி; அவரே கடவுளாகவும் இருக்கிறார். எனவே, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியாகத் தூய ஆவி வழங்கப்படும். கடவுள் வழங்கும் தூய ஆவி நம்மில் ''வல்லமையோடு'' செயலாற்றுபவர். நம்மை உண்மை வழியில் இட்டுச் செல்பவர். நன்மை தீமையை வேறுபடுத்தி உணர நமக்குச் சக்தி தருபவர். எனவே, நாம் நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டுதல் செய்யும்போது கடவுளின் துணை நமக்கு உண்டு.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிமடுத்து எங்களை வழிநடத்தும் உம்மை எந்நாளும் நம்பி வாழ்ந்திட அருள்தாரும்.