தவக்காலம் முதல் வாரம்

வெள்ளி மார்ச், 02.03.2012


முதல் வாசகம்


தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18:21-28

21 தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். 22 அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். 23 உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 24 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். 25 ஆயினும், "தலைவரின் வழி செம்மையானதாக இல்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! 26 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். 27 பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். 28 அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 130:1-8

பல்லவி: ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். 3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். 5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. 7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;" அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:20-26

கடுஞ் சொல்லும் கொலையே

20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். 21 "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


கடுஞ் சொல்லும் கொலையே

இயேசுவின் அன்புக்குரியவரே!
இயேசு கூறுவது முற்றிலும் உண்மை. கொலை மட்டுமே மனிதனின் நிம்மதி வாழ்வைக் குலைத்துவிடுவதாக நினைக்கக் கூடாது. சினம், இன்னும் ஒரு படி இறங்கிச் சென்றால், கடின வார்த்தை மனிதனின் வாழ்வைக் கெடுத்துவிடுகிறது. எனவேதான் இயேசு இறை வெளிப்பாட்டின் நிறைவை இத்தகைய மாற்றங்கள் வழியாக வளங்குகிறார். எனவே கொலை செய்வதுதான் பாவம் என்னும் பழைய ஏற்பாட்டு நியதியை மாற்றி, கோபமும் கடின வார்த்தையும் கொலைக்குச் சமமானது என வலியுறுத்துகிறார். இவ்வாறு கடின வார்த்தைகளால், கடுஞ்சினத்தால் கொலைக்குச் சமமான மன இருக்கத்தையும் அழுத்தத்தையும் தனக்கும் அயலானுக்கும் கொடுத்து அவர்களில் வாழ்வை அழித்துவிடுவதால், கடினவார்த்தையும் கோபமும் கொலைக்குச் சமமானவை. இச் சூழல்களில் ஆலயம் வந்தால் அந்த மன இருக்கமும் அழுத்தமும் குறைந்துவிடும். பாவ மன்னிப்பும் பரிகாரப்பலியும் செலுத்தினால் குற்றமும் குறையும் நீங்கிவிடும்,உண்மைதான். ஆயினும் இயேசு உணர்த்தும் உண்மை பெரிது. வெறும் சடங்கும் ஆச்சாரப் பலியையும்விட, ஆண்டவனோடு மனம் ஒன்றித்து,செய்த தவறுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைந்து, வருத்திய நபரோடு நல்லுறவை ஏற்படுத்திய பின் ஆண்டவனுக்குச் செலுத்தும் பலியே இறைவனுக்கு ஏற்புடைய பலியாகும் என்பது முற்றிலும் சரியான புதிய வெளிப்பாடு மட்டுமல்ல. எல்லோருடைய வாழ்வுக்கும் உகந்தது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:
"அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்; குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்;" (ஏசாயா 5:23)