தவக்காலம் இரண்டாம் வாரம்

சனி மார்ச், 10.03.2012


முதல் வாசகம்


நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி 3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




தந்தை, மகன், அண்ணன் !
நமக்கு நன்கு அறிமுகமான இந்த உவமை வழியாக இன்று நம் வாழ்வை, மனநிலையை சற்று ஆய்வு செய்ய அழைக்கிறது இறைவார்த்தை. இந்த உவமையில் வருகிற தந்தை, ஊதாரி மைந்தன், அவனது சகோதரன் மூன்று பேருமே மூன்று மனநிலைகளைச் சித்தரிக்கிறார்கள். தந்தை அன்பின், பரிவின், நிபந்தனையற்ற மன்னிப்பின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். நாம் அவ்வாறு வாழ முடியுமா? நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களைக்கூடப் பரிவுடன், பாசத்துடன் பார்க்க முடியுமா? மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களின் ஒப்புரவை மகிழ்ந்து கொண்டாட முடியுமா? முயற்சி செய்வோம். ஊதாரி மைந்தன் நேர்மையான மனத்துயரைப் பிரதிபலிக்கிறான். அறிவுத் தெளிவு பெற்றதும் தந்தையிடம் திரும்பி வந்தான். அத்துடன், மகனாக அல்;ல, வேலையாளாகப் பணி செய்ய முன்வந்தான். நாமும் நமது குறைகளை, பாவங்களை மனதார ஏற்றுக்கொள்ள முன்வருகிறோமா? நமது குற்றங்களுக்கேற்ற பரிகாரத்தை, தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? முயற்சி செய்வோம். மூத்த மகன் குறை காணும் மனநிலையை, பொறாமையை, நன்மையை ஏற்றுக்கொள்ளாத மனதை, தீர்ப்பிடும் மனநிலையைப் பிரதிபலிக்கிறான். நாமும் பலநேரங்களில் அவ்வாறே பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பரிவின் பார்வையைப் புறக்கணித்து, தீர்ப்பிடும் பார்வையால் பிறரைப் பார்க்கிறோம். சட்டத்தின் பார்வையில், மனித நீதியின் அடிப்படையில் செயல்படுகிறோம். நம் பார்வையை மாற்றுவோமா?

மன்றாட்டு:
அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய மனநிலையை மாற்றி, தந்தையின் பரிவின் மனநிலையையும், மகனின் ஒப்புரவின் மனநிலையைத் தாரும். பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் வரத்தைத் தாரும்.