தவக்காலம் ஐந்தாம் வாரம்

சனி மார்ச், 31.03.2012


முதல் வாசகம்


இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28

தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன், இஸ்ரயேலின் மலைகள் மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசனாய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும், அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான். நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


எரே 31: 10. 11-12யb. 13 (பல்லவி: 10b)

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி
11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12யb அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். பல்லவி
13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

(எசே 18: 31) எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

அக்காலத்தில் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர். தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, ``இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!'' என்று பேசிக்கொண்டனர். கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், ``உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை'' என்று சொன்னார். இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார். யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். ``அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி,...'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' என்று பேசிக்கொண்டனர்'' (யோவான் 11:47-48)
மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. சிலர் இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்டு வியந்தார்கள். கடவுளின் வல்லமையோடுதான் அவர் இச்செயல்களைச் செய்தார் என அவர்கள் ஏற்றனர். வேறு சிலர் இயேசு முன்னாளைய இறைவாக்கினர் போல போதித்துச் செயல்பட்டதைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இன்னும் சிலர் இயேசுவிடம் துலங்கிய இரக்க குணம், அனைவரையும் மன்னித்து ஏற்கும் தன்மை, ஏழைகளைச் சார்ந்து செயல்படல், நோயுற்றோருக்கு நலமளித்து அவர்களைச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தல் போன்ற செயல்பாடுகளைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை வைத்தனர். ஆனால் வேறுசிலரோ இயேசுவை ஏற்க மறுத்தனர். இவர்கள் பெரும்பாலும் அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களே. சமய அதிகாரிகள் இயேசுவை யூத சமயத் துரோகியாகக் கண்டனர். அரசியல் அதிகாரிகள் அவர் ஆதிக்கத்திற்கு உலைவைக்கப்போகிறாரோ என எண்ணி அஞ்சினர். -ஆனால் சாமானிய மக்கள் இயேசுவை ஏற்கத் தயங்கவில்லை. அவர்களுடைய இதயத்தில் நெகிழ்ச்சி இருந்தது. கடவுளின் வார்த்தையைக் கேட்கின்ற மனநிலை அவர்களிடத்தில் துலங்கியது. குறிப்பாக, ஏழைகளும் அக்காலத்தில் பாவிகளாகக் கருதப்பட்டவர்களும் இயேசு தங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளார் என்பதை எளிதில் கண்டுகொண்டனர். அவர்கள் இயேசுவைத் தேடிச் சென்றனர்; அவருடைய சொல்லிலும் செயலிலும் கடவுளின் வல்லமையையும் அன்பையும் கண்டனர். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவை எவ்வாறு அணுகுகின்றோம்? நம் இதயம் திறந்திருக்கிறதா அல்லது அடைபட்டிருக்கிறதா? இயேசுவின் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்க ஒருபோதும் தவறுவதில்லை; நாம்தான் அக்குரலுக்குச் செவிமடுக்க முன்வருவதில்லை.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தில் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.