உயிர்ப்புக்காலம் முதல் வாரம்

சனி ஏப்ரல், 14.04.2012


முதல் வாசகம்


நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். ``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள். அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21ய)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

அல்லது: அல்லேலுயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா. (திபா 118: 24)


நற்செய்தி வாசகம்



+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்".
நல்லவைகளை நாலு பேரிடம் சொல்லத் துடிக்கும் மனது. இது இயற்கை. அனுபவத்தை அண்டை அயலானோடு பகிரந்துகொள்ள ஆசைகொள்வதும் இயல்பு.அதிலும் அதிசயங்கள் அற்புதங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வித்தியாசமான செய்திகள் என்றால் அவ்வளவு வேகம், விறுவிறுப்பு. பத்திரிக்கைகள் இதைத்தானே முதலீடு செய்கிறது. இயல்போடு இணைந்து இயங்கும் இயேசுவும் இதன் அடிப்படையிலே படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றும் பெறும் பணியை தன்சீடர்களிடம் ஒப்படைக்கிறார். முதன்முதலாக உயிர்த்த இயேசுவைக் கண்ட மகதலா மரியா, இயல்பாக புறப்பட்டுச் சென்று, இயேசுவின் சீடர்களுக்கு அதை அறிவித்து தன் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் பின் உயர்த்த இயேசுவை கண்ட சீடர்களுக்கு இயல்பான இச் செயல் ஒரு உன்னத பணியாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இயல்பான ஒன்றை, ஒரு பணியாக ஒப்படைத்ததன் மூலம், இந் நற்செய்தியை பறைசாற்றுவது ஒரு பெருங்கடமை என்பதை உறுதிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அதே உயிர்த்த இயேசுவைப் பார்த்தவர்கள். திருமுழுக்கால் இயேசுவோடு இறந்து உயிர்த்தவர்கள் நீங்கள். ஆகவே அந்த உயிர்ப்பின் அனுபவத்தை உங்கள் அருகில்உள்ள உங்கள் நண்பருக்கு அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. சோர்ந்திருக்கும் உங்கள் நண்பருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுங்கள். நீங்கள் இயேசுவின் மிகச் சிறந்த நற்செய்திப் பணியாளர். இயேசுவின் ஆசீர் பெறுவீர்கள். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.