உயிர்ப்புக்காலம் இரண்டாம் வாரம்

சனி ஏப்ரல், 21.04.2012


முதல் வாசகம்


``இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, ``நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' என்று கூறினர். திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 33: 1-2. 4-5. 18-19

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.பல்லவி

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.பல்லவி

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.பல்லவி

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



யோவான் 6:1-15

''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். 10 இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம். -- உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.