உயிர்ப்புக்காலம் நான்காம் வாரம்

சனி ஏப்ரல், 05.05.2012


முதல் வாசகம்


"கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52

44 அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45 மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46 பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47 ஏனென்றால், "உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்" என்று ஆண்;டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்" என்று எடுத்துக் கூறினார்கள். 48 இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49 அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50 ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51 அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52 சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 98:1-4

பல்லவி: யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. 2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். -பல்லவி

3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள், - பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 14:7-14)

''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)

7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது; "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)

இயேசு மக்களுக்குப் போதனை வழங்கினார்; அரும் செயல்கள் பல புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் வல்லமையை மக்களுக்கு எடுத்துக்காட்டின. குறிப்பாக, இயேசுவோடு கூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் சொற்களை நேரடியாகக் கேட்டார்கள், அவர் புரிந்த அரும் செயல்களை அருகிருந்து கண்டார்கள். எனவே அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்திருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இருந்தாலும், சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. பிலிப்பு இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு இயேசு வேறு என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால் இயேசு பிலிப்புவின் தவறான பார்வையைத் திருத்துகின்றார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு. இயேசு தந்தையால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்தவர்; தந்தையே இயேசுவுக்குத் ''தோற்றுவாய்'' எனலாம். எனவே தந்தை இயேசுவிடம் உறைகின்றார்; இயேசு தந்தையிடம் உறைகின்றார். இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால் இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் இயேசு அறிவிக்கின்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். -- இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் இயேசு, ''என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'' எனக் கூறுகிறார் (யோவா 14:9). இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை எனவும் ஏற்போம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் நாம் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு நமக்குக் கொடையாகத் தருகின்ற தூய ஆவி (காண்க: யோவா 14:16,17அ).

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.