உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திங்கள் ஏப்ரல், 14.05.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது; "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். திருப்பாடல்கள் நூலில், "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!" என்றும் "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்." அத்தகையோருள், இருவரை முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா. பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்கு பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 113: 1-2 3-4. 5-6 7-8

பல்லவி: உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கிறார்.

1 அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 15:9-17)

9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். 12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. 13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். 15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசு, 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்... உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்றார்'' (யோவான் 15:15)

இயேசு கலிலேயாவில் இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது பலரைத் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார். அவரே விரும்பி தம் சீடரை அழைத்தார். அவர்கள் தம் பணியைத் தொடர வேண்டும் எனவும் இயேசு பணித்தார். எனவே, ஒருவிதத்தில் இயேசுவின் சீடர்கள் எல்லாரும் பணியாளர்களே. ஆனால் இயேசு தம் சீடர்களைப் பணியாளர் என அழைக்காமல் ''நண்பர்கள்'' என அழைக்கிறார். இதில் ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது. அதாவது, இயேசுவை அவருடைய சீடர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகப் பார்த்தார்கள்; ஓர் இறைவாக்கினராகக் கருதினார்கள்; அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டார்கள். அக்காலத்தில் யூத சமயத்தில் வழக்கிலிருந்தவாறே இயேசுவைப் பற்றிச் சீடர்கள் சிந்தித்தார்கள். ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையைப் படிப்படியாக மாற்றினார். அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்த்தபோது இயேசு அவர்களுக்குத் தாம் ஒரு துன்புறும் மெசியாவாக வந்ததாக விளக்கினார். இவ்வுலக அதிகாரத்தோடும் ஆட்சித் தோரணையோடும் அவர் வரவில்லை. மாறாக, அவருடைய அதிகாரம் பணிசெய்வதில் அடங்கியது என இயேசு எடுத்துரைத்தார். -- இவ்வாறு தம்மையே பணியாளராகக் கண்ட இயேசு தம் சீடர்களைத் தம் ''நண்பர்கள்'' என அழைத்தது ஏன்? இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவு குரு-சீடன் என்னும் உறவைவிட ஆழமானது. அந்த உறவு அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. நண்பர்களுக்கிடையே நெருக்கமான உறவு நிலவும். ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வர்; இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்பர். தம்மிடம் இருப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்வர். இந்த உறவைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். சீடர்கள் இயேசுவின் அன்பை அருகிலிருந்து துய்த்து உணர முடிந்தது. அவர்கள் எப்போதுமே இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவருடைய அன்பு ஒருநாளுமே குறைபடவில்லை. மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. இயேசு தம் சீடர்கள் தவறியபோதெல்லாம் அவர்களை மீண்டும் அரவணைத்திட முன்வந்தார். ஆக, நமக்கும் இயேசு உண்மையான அன்பராக, நண்பராக இருக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய நட்பை ஒரு கொடையாக ஏற்றிட வேண்டும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியவற்றவர்களாக இருந்தாலும் அந்த அன்பு நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். நம் அன்புக் கடவுளின் பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். அவருடைய பற்றினை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் நட்பைத் துய்க்கின்ற நாம் அந்த நட்புறவைப் பிறரோடும் பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு:
இறைவா, உம் அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.