உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

செவ்வாய் ஏப்ரல், 15.05.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ``நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்'' என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, ``பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்'' என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 138: 1-2. 2-3. 7-8

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; பல்லவி

7 உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 16:05-11)

5 இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட்காமலேயே 6 நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். 7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 8 அவர் வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். 9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. 10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள். 11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றவிட்டான்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசு சீடர்களை நோக்கி, 'தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்... அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்'' (யோவான் 15:26-27)

இயேசு இறந்ததும் சீடர்கள் நம்பிக்கை இழந்துபோயினர். இவ்வளவு காலம் தங்களோடு பேசிப் பழகி நடமாடிய தங்கள் தலைவர் தங்களைத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டாரே என அவர்கள் கலங்கினர். அப்போது இயேசு அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக எடுத்துரைத்து அவர்களைத் தேற்றினார். இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்தம் சீடர்களுக்குப் புத்துயிர் வழங்கியது; புதிய தெம்பை ஊட்டியது. இயேசு தம்மை விட்டுப் பிரிந்தாலும் தம்மோடு ஒரு புதிய முறையில் தங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஏனென்றால் இயேசு அவர்களுக்குத் தூய ஆவியை வாக்களித்தார். -- தூய ஆவி தந்தையிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வருபவர். அவர் இயேசுவின் சீடர்களுக்குத் துணையாக வருகிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்துகிறார். ''நானே உண்மை'' என இயேசு அறிவித்திருந்தார். கடவுளைப் பற்றியும் கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு பற்றியும் அமைந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்துவது தூய ஆவியின் வழியாகவே. இவ்வாறு உண்மையை நமக்குத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்ற ஆவி இயேசுவைக் குறித்து ''சான்று பகர்வார்''. அதாவது, தூய ஆவியின் செயல் வழியாக இயேசு நம்மிடையே தங்கி நம்மை வழிநடத்துவதை நாம் உணர்ந்துகொள்வோம். இயேசுவைப் பற்றி அறிவு பெறுகின்ற நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். எனவே, தந்தையிடமிருந்து நம்மைத் தேடி வந்த இயேசு, தந்தையிடம் சென்றதோடு நின்றுவிடாமல் நம்மோடு என்றும் தங்கியிருந்து நமக்குக்; கடவுளைப் பற்றிய உண்மையைத் தொடர்ந்து அறிவிக்க தூய ஆவியை அளித்துள்ளதால் நாமும் சான்று பகர்வதற்கான தகுதியையும் பொறுப்பையும் பெறுகின்றோம். கடவுளின் அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:
இறைவா, உம் அன்புக்குச் சான்று பகர்ந்து இவ்வுலகில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.