பொதுக்காலம் - 9 ஆம் வாரம்

திங்கள் ஜூன், 04.06.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது: கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக! தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப் பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார். தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகை விட்டு விலகியோடி இறைத் தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு உயர் மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப் பற்றும், இறைப் பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 91: 1-2. 14-15யb. 15உ-16 (பல்லவி: 2b)

பல்லவி: ஆண்டவரே, நீரே நான் நம்பியிருக்கும் இறைவன்.

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

14 `அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15யb அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

15 அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன். 16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12

அக்காலத்தில் இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ``ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள். இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள். திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று' என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?'' என்று அவர் கேட்டார். தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்'' (மாற்கு 12:2)

மக்களுக்குக் கடவுளாட்சி பற்றி போதித்த இயேசு உவமைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை எடுத்துரைத்தார். ''கொடிய குத்தகைக்காரர் உவமை'' என்னும் கதையில் வருகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். குத்தகைக்காரர்கள் தோட்டத்தை நன்முறையில் காவல் காத்து, அதிலிருந்து பலன் எடுத்து, தம்மிடம் அத்தோட்டத்தை ஒப்படைத்த உரிமையாளருக்கு அவருக்கு உரிய திராட்சைப் பழங்களைக் கொடுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறியது மட்டுமல்ல, அத்தோட்டத்தின் உரிமையாளர் அனுப்பிய பணியாளர்களை அவமதித்து, அவருடைய மகனையும் கொன்றுபோடுகிறார்கள். இயேசு இந்த உவமை வழியாகக் கூறிய உண்மை இயேசுவின் பகைவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது. அவர்களிடம் கடவுள் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறியதோடு, கடவுளால் அனுப்பப்பட்டு அவர்களைத் தேடி வந்த இயேசுவையும் அவர்கள் கொல்லத் தேடினார்கள். -- கடவுள் நம்மிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். அவருடைய அழகிய படைப்பாகிய இவ்வுலகம் அவர் நம் கைகளில் தந்துள்ள பொறுப்பு. இந்த உலகத்தைக் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப நன்முறையில் பாதுகாத்துப் பேணுவது நம் கடமை. ஆனால் நாம் இப்பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறோம். இவ்வுலகில் உள்ள வளங்களும் செல்வங்களும் எல்லையற்றவை என்னும் தவறான எண்ணத்தில் மனிதர்கள் உலக வளங்களைச் சுறண்டுகிறார்கள். அதன் விளைவாக, நீரும் நிலனும், காடும் மலையும், காற்றும் சுற்றுப்புறமும் மாசடைந்து மனித வாழ்க்கை சீர்குலையத் தொடங்குகிறது. நாம் உலகத்தை ''அடக்கி ஆளலாம்'' என நினைப்பதற்குப் பதிலாக, இவ்வுலகத்தைப் ''பொறுப்போடு கண்காணிக்க வேண்டும்'' என்னும் சிந்தனையைப் பெற வேண்டும். அப்போது இன்றைய தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் சீரிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க இயலும். இவ்வாறு பொறுப்போடு செயல்பட்டால் நாம் மனிதரை மனிதராக மதிப்போம். மனிதரைக் கடவுளின் சாயலாக ஏற்று, அவர்களுடைய நலனை முன்னேற்றுவதில் கருத்தாயிருப்போம்.

மன்றாட்டு:
இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.