கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா - வியாழன்

இரண்டாம் ஆண்டு 07-06-2012


என்னை உண்போர் என்னால் வாழ்வர்

இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்/>


திருப்பலி முன்னுரை


ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா. இத் தினத்தில் நாம் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்பவை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு ஆகியவைபற்றிச் சிந்திக்க ஒன்று கூடியுள்ளோம்.

நாளாந்தம் இயேசுவின் திருவுடலாம் நற்கருணையை உட்கொள்ளும் நாம், அவர் நமக்காகச் செய்த தியாகங்களையும், நமக்குச் செய்த எல்லா அருள் நலன்களையும் நினைந்து அவருக்கு நன்றி கூறவும், அவர் நமக்கு விட்டுச்சென்ற அன்பு, ஒற்றுமை, தியாகம், மன்னிப்பு, அர்ப்பணம் ஆகிய தலைசிறந்த பண்புகளை நாமும் வாழ்ந்து பிறரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கப்படுகின்றோம். நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை. இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்று புனித பவுல் அடிகளார் கூறுகிறார். இந்த உழைப்பு இறைவனின் உள்ளத்திலும் இதயத்திலும், மனித உள்ளமும், மனித இதயமும் குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்பு. வாழ்வின் உணவாக நற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும், பசியையும் போக்குகிறார்; நம்மைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார். விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார். நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழ அகலத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார். நம்மோடு நெருக்கமான உறவுகொள்ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடு வரவேற்போம். ஆகவே நாம் அனைவரும் என்றென்றும் நம்மோடு நிலைத்து நின்று வாழ்வுதரும் இறைவனது பேரன்பிற்காக நன்றி சொல்லுவோம், ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்பவை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணித்து தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தை களையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, ``ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்'' என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், ``ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந் திருப்போம்'' என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து, ``இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13)

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

பல்லவி

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி



இரண்டாம் வாசகம்



எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவுமிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 6: 51-52 - அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. ! அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

“எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்ற எம் தலைவனே,

எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவே பாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்ப துயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாக உம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

“வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே

எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதலின் ஆண்டவரே!

இலங்கை நாட்டில் பல்வேறு விதமாக அல்லலுறும் எமது தமிழ் மக்களைமீது இரக்கமாயிரும். அவர்கள் படும் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்திடவும், நிம்மதியான வாழ்வை அவர்களுக்கு அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

வாழ்வளிப்பவராம் இறைவா,

நாம் வாழுவதற்கு நீர் கொடுத்திருக்கும் இந்த நாட்டிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்; இந்த மண்ணில் நாங்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதிபெற்று உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு தந்தையே இறைவா,

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



-->