பொதுக்காலம் - 9 ஆம் வாரம்

வெள்ளி ஜூன், 08.06.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17

அன்புக்குரியவரே, என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மன உறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 119: 157-160. 161,165. 166,168 (பல்லவி: 165ய)

பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.

157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை. 160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. பல்லவி

161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது. 165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. பல்லவி

166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன். 168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 14: 23 - அல்லேலூயா, அல்லேலூயா! �என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்� என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37

அக்காலத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, �மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், �ஆண்டவர் என் தலைவரிடம், ``நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்� என்று உரைத்தார்� எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?� என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு...'மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?...தாவீது அவரைத்; தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?' என்று கேட்டார்'' (மாற்கு 12:35-37)

பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் தாவீதின் வழித்தோன்றலாக ஒருவர் தோன்றி மக்களை வல்லமையோடு வழிநடத்துவார் என்னும் கருத்து உண்டு (காண்க: எசா 9:5-6; எரே 23:5-6; எசே 34:23-24). யூதர்கள் பொதுவாக இவ்வழித்தோன்றலை ''மெசியா'' என்று குறிப்பிட்டார்கள். தாவீது அரசர் எழுதியதாக மரபுவழிக் கருதப்படுகின்ற ''திருப்பாடல்கள்'' நூலில் 110ஆம் பாடலை இயேசு மேற்கோள் காட்டி, தாவீது மெசியாவைத் தம் ''தலைவர்'' என்று குறிப்பிடுவதால் மெசியா தாவீதுக்கு மகனாக இருக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்புகிறார். மகனைத் தந்தை ''தலைவர்'' என அழைப்பதில்லை; மகனே தந்தையைத் தம் தலைவராக ஏற்றுக்கொள்வார். எனவே, மெசியாவாக வந்த இயேசு ஒருவிதத்தில் தாவீதுக்கு மகனாக இருக்க முடியாது. அவர் உண்மையில் ''கடவுளின் மகன்''. அதே நேரத்தில் அவர் தாவீதின் வழித்தோன்றலாகப் பிறந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் காட்டுகின்றன. இந்த வழித்தோன்றல் உலகப் பாணியில் அமைந்த அதிகாரத்தோடு வந்து, உரோமையரை முறியடித்து, இஸ்ரயேலுக்கு அரசியல் விடுதலை வழங்குகின்ற மெசியாவாக இருக்க மாட்டார் என்பதை இயேசு உணர்த்துகிறார். எனவே, ஒருவிதத்தில் இயேசு ''தாவீதின் மகன்'' என்றாலும் அதற்கு இயேசு தருகின்ற பொருள் வேறுபட்டதாக இருப்பதைக் காண்கிறோம். -- இயேசு உண்மையிலேயே மெசியாவாக வந்தார். ஆனால் மக்கள் எதிர்பார்த்த மெசியாவைப் போல அவர் படைபலமோ, பொருள்வளமோ, அதிகாரத் தோரணையோ கொண்டவராக வரவில்லை. அவர் ''துன்புறும் மெசியாவாக'' வந்தார். அதே நேரத்தில் இயேசுவை நாம் தாவீதின் வழித்தோன்றல் எனச் சாதாரணப் பொருளில் புரிந்துகொள்வது சரியாகாது. ஏனென்றால் இயேசு கடவுளின் மகனாகவும் இருப்பதால் கடவுளால் மாட்சிபெற்றுள்ளார். கடவுளுக்கே உரித்தான மகிமை அவருக்கு உண்டு. இப்பொருளில் அவர் தாவீதை விட எத்துணையோ உயர்ந்தவர். இவ்வாறு இயேசு தம்மைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்த போது மக்கள் அவர் கூறியதை முழுமையாகப் புரிந்திருப்பார்களா என்பது ஐயமே. என்றாலும், மக்கள் ''இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்'' (மாற் 12:27). நாமும் இயேசுவின் சொற்களைத் திறந்த உள்ளத்தோடு கேட்க வேண்டும். அதே நேரத்தில் நாம் கேட்டவற்றைப் புரிந்துகொள்ள நாம் இறையருளை நாட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவை முழுமையாகப் பின்செல்ல எங்களுக்கு அருள்தாரும்.