பொதுக்காலம் - 10 ஆம் வாரம்

செவ்வாய் ஜூன், 12.06.2012


முதல் வாசகம்



அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16

அந்நாள்களில் நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது. அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: �நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்.� எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, �ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா� என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, �எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?� என்றார். அவர், �வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்� என்றார். எலியா அவரிடம், �அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது� என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 4: 1-2. 3-4. 6உ-7 (பல்லவி: 6உ)

பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.

1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்; 2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? பல்லவி

3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; - இதை அறிந்துகொள்ளுங்கள். 4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். பல்லவி

6 ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும். 7 தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 5: 16 - அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 5:13-14)

''மலைப் பொழிவு'' என்னும் பகுதி மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இயேசு ஆற்றிய ஐந்து பெரிய போதனைப் பகுதிகளில் முதலாவதாகும் (அதி. 5-7). எஞ்சிய நான்கும் முறையே திருத்தூதுப் பொழிவு (அதி. 10), உவமைப் பொழிவு (அதி. 13), திருச்சபைப் பொழிவு (அதி. 18), நிறைவுகாலப் பொழிவு (அதி. 24-25) என அழைக்கப்படுகின்றன. இயேசு கடவுளாட்சி பற்றி வழங்கிய போதனைகளை மத்தேயு இவ்வாறு தொகுத்து வழங்கியுள்ளார். மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கிறது. பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது (காண்க: யோபு 6:6; சிஞா 39:26; 2 அர 2:19-22). இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோது உப்பு பயன்பட்டது (எண் 18:19; 2 குறி 13:5). வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றது (விப 30:35; லேவி 2:13; எசே 43:24; எஸ் 4:14; திப 1:4). நிலம் செழிப்பாக இருக்க உப்பு அதில் உப்பு இருக்க வேண்டும். இயேசு உப்பு என்னும் உருவகத்தை எப்பொருளில் பயன்படுத்தினார்? சீடர்கள் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும். உப்பு தன் காரத்தை இழந்துவிடக் கூடாது. அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது (மத் 5:11-12). -- சீடர்கள் ''உலகுக்கு ஒளி'' என இயேசு கூறுகிறார் (மத் 5:14). உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய காலத்தில் உரோமை நகரம் ''உலகின் ஒளி'' என்று போற்றப்பட்டது. ஆனால் இயேசு தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதிக்கிறார். இத்தகைய ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும்; பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு அங்கே இராது. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் ''உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும்'' இருக்கும்படி அழைக்கிறார். உப்பும் ஒளியும் பிறருக்குப் பயன்படுகின்றன. உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு உணவுக்குச் சுவையூட்டும், ஆனால் தன்னையே கரைத்துவிடும். அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறு சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது. இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்கள் இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற ''உப்பாக'' மாற வேண்டும்; உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற ''ஒளியாக'' விளங்க வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் ஒளியால் நாங்களும் ஒளிர்ந்திட அருள்தாரும்.