பொதுக்காலம் - 10 ஆம் வாரம்

வியாழன் ஜூன், 14.06.2012


முதல் வாசகம்



அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46

அந்நாள்களில் எலியா ஆகாபை நோக்கி, �நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது� என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார். பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, �நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்� என்றார். அவன் போய்ப் பார்த்து, �ஒன்றும் இல்லை� என்றான். எலியா அவனை நோக்கி, �ஏழுமுறை மீண்டும் சென்று பார்� என்றார். ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, �இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது� என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, �நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்� என்றார். இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 65: 9ய-உ. 9ன-10. 11-12 (பல்லவி: 1ய)

பல்லவி: உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!

9 மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி பல்லவி

9 நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். 10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. 12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 13: 34 - அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். `கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையnனில், நீங்கள் விண்ணரசில் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 5:20)

இயேசுவின் மலைப்பொழிவு பல போதனைகளை உள்ளடக்கியது. குறிப்பாக, இயேசு தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரு ''புதிய வாழ்க்கை முறை''யை அறிவிக்கின்றார். அதாவது பழைய நெறிக்குப் பதிலாக ஒரு புதிய நெறி நமக்கு வழங்கப்படுகிறது. முற்காலத்தில் கடவுளின் கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை இயேசு ஏற்றாலும் அந்த விளக்கத்தை விடவும் அதிக வேரோட்டமான விதத்தில் அவர் திருச்சட்டத்திற்கு விளக்கம் தருகின்றார். இது குறிப்பாக, ''கொலை'', ''விபசாரம்'', ''மண முறிவு'', ''பொய்யாணை'', ''பழிக்குப் பழி'', ''பிறர் மட்டில் அன்பு'' ஆகிய ஆறு பொருள்கள் பற்றிய கட்டளைகளுக்கு இயேசு தருகின்ற புதிய விளக்கத்தை உள்ளடக்கும். கொலை என்பது பிற மனிதரோடு நமக்குள்ள உறவு முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில் நிகழ்கின்ற குற்றம். கடவுள் மோசே வழியாக வழங்கிய சட்டம் ''கொலை செய்யாதே'' என்று கூறுகிறது (காண்க: விப 20:13; இச 5:18). ஆனால் பிறர்மட்டில் சினம் கொள்வதே தவறு என இயேசு போதிக்கிறார். கோபம் எழுகின்ற வேளைகளில் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இதை இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக விளக்குகின்றார். பிறரை நாம் ''அறிவிலியே'' என அழைப்பது தவறு; கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் முறிந்த உறவு சரியாகிவிடும் என்று எண்ணாமல், முறிந்த உறவை முதலில் சரிப்படுத்திவிட்டு, அதன் பின் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதே முறை; நீதி மன்றம் செல்கின்ற அளவுக்கு நாம் உறவுகளை முறித்துவிடலாகாது. இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக நாம் உண்மையான அன்பைக் கடைப்பிடிக்கின்ற முறையை இயேசு விளக்குகிறார். -- எனவே, ''கொலை செய்யாதே'' என்னும் கட்டளையின் பொருள் பிறருடைய உயிரைப் பறிப்பது தவறு என்பதை மட்டும் குறிப்பதன்று. மாறாக, பிறரோடு நாம் கொள்ள வேண்டிய நல்லுறவுக்குத் தீங்கு விளைவிக்கின்ற சொல், செயல் அனைத்தையும் நாம் விலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ''நம் நெறி மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விடச் சிறந்ததாய் இருக்கும்'' (காண்க: மத் 5:20). அப்போது நாம் கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு:
இறைவா, நாங்கள் பிறரன்பில் சிறந்து விளங்க அருள்தாரும்.