பொதுக்காலம் - 10 ஆம் வாரம்

சனி ஜூன், 16.06.2012


தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் - தூய ஆவி விழாவுக்குப் பின்வரும் 2ஆம் ஞாயிறை அடுத்த சனி - தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்

முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11

எருசலேமின் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித் தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர் மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும் ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார். பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 2: 19 காண்க - அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர் களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ``மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?''

ஒரு சமயத்தில் அரசர் ஒருவர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவிப்பு செய்திருந்தார். அந்நாட்டில் திறமை மிகு ஓவியர்கள் பலர் இருப்பினும் சிறந்த ஓவியமாய் எதை வரைவது என்பது தான் குழப்பமாய் இருந்தது. கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். மாலை நேரம் விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தொழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார். அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது. இதுதான் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும். ‘ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் (தி.பா. 128:3-4) என வாசிக்கிறோம். திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் கொள்ள வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா? எனப் பெயர் குறிப்பிடும்சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் ‘இதோ ஆண்டவரின் அடிமை’ எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்பணிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை. இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பாஸ்கா விழாவில் முழுமையாகப் பங்கேற்று நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுகையில் ஒருநாள் பயணம் முடிந்த பின்பு சிறுவன் இயேசு தங்களோடு வராததைக் கண்டு அவரைத்தேடிக் கொண்டு எருசலேமுக்குச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின் எருசலேம் ஆலயத்தில் அறிஞர்கள் நடுவில் அமர்ந்து. அவர்களோடு உரையாடுவதைக் கண்டு வியப்புற்றனர். ‘மகனே ஏன் இப்படிச் செய்தாய், இதோ பார் உன் தந்தையும் நானும் மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே’ என்று மரியா சொன்ன வார்த்தைகள் தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு பாலன் இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர். இன்று திருக்குடும்பத்தின் உறுப்பினர்களை நாம் எருசலேம் ஆலயத்தில் சந்திக்கின்றோம். திருக்குடும்பத்தின் உறுப்பினர்கள் மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திக்கின்றோம். இக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள். புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். ‘என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம் என்றார். ‘நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும்.

மன்றாட்டு:
‘நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும். குடும்பங்கள் வளரட்டும்; குடும்ப வாழ்வு சிறக்கட்டும்