பொதுக்காலம் - 12 ஆம் வாரம்

வியாழன் ஜூன், 28.06.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகு வாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, ``எங்களைப் பார்'' என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், ``வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்'' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்கள் அனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 19: 1-2. 3-4 (பல்லவி: 4ய)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 36 உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாட விடாதேயும். பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது. அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி

37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும். 40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 21: 17 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மத் 7:21-29

என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?; என்பர். அதற்கு நான் அவர்களிடம், உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது. ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது. ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பெருங் காற்று வீசியது அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது. இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பிலி; ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்' என்றார்'' (மத்தேயு 7:6)

ஒரு வீட்டை கட்டுவதற்கு நாம் மிக ஆழமான குழி தோண்டி அத்திவாரம் இட்டு அதன் மீதான் கட்டிடத்தைக் கட்டுகின்றோம். ஏன் என்றால் கட்டிடம் மிக நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க வேண்டும். அவ்வாறு தான் நமது கத்தோலிக்க விசுவாசமும் ஆழமானதாக எந்த வேளையிலும் அசைந்து போகாமல் இருக்க வேண்டும். இதற்கு நாம் கடவுளின் வார்த்தையை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்று இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றார். எமது விசுவாச வாழ்வை பலர் பார்க்கின்றார்கள். குறிப்பாக எமது பிள்கைள் பார்க்கின்றார்கள.; மிக அவதானமாக உற்று நோக்குகின்றார்கள். காலப் போக்கில் நாம் செய்யும் தவறுகளை பிள்ளைகள் செய்ய முற்படும் போது எம்மால் அதனை தடுக்க முடியாமல் போய்விடுகின்றது. உதாரணமாக ஒரு தகப்பன் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் என்று வைத்துக் கொள்வோம் அவருடைய மகன் மிக இளம் வயதில் புகைபிடிக்க தொடங்கினால் அதனை தட்டிக் கேட்கும் சக்தியை தந்தை இழந்து விடுகின்றார். இதனை இன்றைய முதல்வாசகத்தில் பார்க்கலாம். 18 வயதில் அரசன் ஆன யோயாக் அவனது தந்தையைப் போலவே ஆண்டவரின் பார்வையில் தீயது எனப்பட்டதை செய்தான் (2அரசர் 24:9) என்று பார்க்கின்றோம். இதனால் அவன் அழிக்கப்படுகின்றான் ஆண்டவருக்கு ஏற்ற முறையில் அவன் வாழவில்லை. இன்று நாம் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கின்றோம?; எமது பிள்ளைகளுக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ்கின்றோமா? நேர்மையான பாதையில் செல்கின்றோமா? எனவே எமது வாழ்வில் உண்மையும் தூய்மையும் நேர்மையும் இருக்கும் போது இறைவன் எம்மோடு கூட வருவார். ஆனால் இதற்கு மாறான வாழ்வு நாம் வாழ்வோமானால் இறைமகனும் எம்மைத் தெரியாது என்று சொல்கின்ற நிலை நமக்கும் ஏற்டலாம்.

மன்றாட்டு:
அன்பின் ஆண்டவரே! பாறை மீது கட்டப்பட்டதாக எமது விசுவாச வாழ்வை மாற்றி அமைத்தருளும் ஆமென்.