பொதுக்காலம் - 12 ஆம் வாரம்

சனி ஜூன், 29.06.2012


முதல் வாசகம்



புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2,10-14,18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார். மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர். என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், `அப்பம், திராட்சை இரசம் எங்கே?' என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்! மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்! அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்! எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 74: 1-2. 3-4. 5-7. 20-21 (பல்லவி: 19b)

பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!

1 கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது? 2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். பல்லவி

3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். 4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். பல்லவி

5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள். 6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்; 7 அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். பல்லவி

20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. 21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 8: 17 - அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


ஆம் எமது துயரங்கள் வேதனைகளில் நாம் கண்ணீர் விடும் போது அதை இறைவனின் பாதத்தில் அர்ப்பணிப்போம.; அழுகையில் உருவாகும் மன உறுதி, மனவலிமை, எதையும் தாங்கும் சக்தி என்பதனையும் எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது என்பதனையும் கருத்தில் கொள்வோம்..

அழகான ஆலைகள,; கட்டிடங்கள் சிறந்த ஆன்மீக வாழ்விற்கு அடையாளம் அல்ல. பக்தி நிறைந்த வாழ்வு என்பது எமது அனுபவங்களில்தான் வெளிப்படும். இஸ்ரவேலரை இறைவன் பாவ வாழ்வில் இருந்து மீட்பதற்காக நீதியுள்ள நீதிபதியாக நியாய தீர்ப்பு வழங்கினார். இறைவனின் நியாயத் தீர்ப்பிற்கு முன்னால் யார் நிமிர்ந்து நிற்க முடியும?; இறைவனின் நியாயத் தீர்ப்பிலிருற்து தப்ப மனம் திரும்புதலே சிறந்த வழியாகும். இந்த வேதப் பகுதியை வாசிக்கும் போது மூன்று ஆண்டிற்கு முன்பு எம் தாயகத்தில் எம் இனத்திற்கு நடந்த அவலமே எம் கண்முன் நிற்கின்றது. அழுகையும், கண்ணீரும், துயரமும், துன்பமும், மனித வாழ்வில் இயல்பானதுதான். அவை அசிங்கமானதோ அருவருப்பானதோ அல்ல. துன்பங்கள் எவ்வளவு நம் வாழ்வில் சூழ்ந்தாலும் அதை நன்மைக்கு ஏதுவாக பயன்படுத்தினால் மிகுந்த பலனை அடைய முடியும். இறைவன் தமக்கு நெருக்கமானவர்கள் பலரைக் கண்ணீர்ப் பாதையிலே வழிநடத்துவார். நம்முடைய கண்ணீர் ஆண்டவரின் பாதத்தில் சரியான விதத்தில் ஊற்றப்படுமானால் அது மிகுந்த பலனைக் தரும.; என் துன்பங்களின் எண்ணிக்கையை நீpர் அறிவீர். உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர். இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா (தி.பா 56:8). துயரமும் கண்ணீரும் நம்மைப் பரலோ பாதையில் நெருக்கமாக பயணிக்க வழிநடத்துபவை. இன்றைய நற்செய்தியில் நூற்றுவத் தலைவன் தனது மகளின் நோயையிட்டு வேதனையுறும் வேளையிலும் இயேசுவிடம் பதிலாக நீர் என் இல்லத்திற்கு வர நான் தகுதியற்றவன் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் எனது மகள் குணமடைவாள் என்று தனது துயரத்திலும் தன்னுடைய விசுவாச வாழ்வை இறுகப்பற்றி கொண்டு நிற்கிறார்.

மன்றாட்டு:
கண்ணீரைப் போல ஒரு நண்பன் இல்லை, கற்றுக் கொள்ள துன்பம் போல ஒரு பாடம் இல்லை, உன் நெஞ்சில் துயரம் எல்லாம் விட்டு தள்ளு, உனக்கு இன்று இறைவனைத் தவிர யாரும் இல்லை ஆமென்.