பொதுக்காலம் - 13 ஆம் வாரம்

சனி ஜுலை , 07.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15

ஆண்டவர் கூறுவது: ``அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,'' என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர். ``இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்'' என்கிறார் ஆண்டவர். ``என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்'' என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 85: 8யb. 10-11. 12-13 (பல்லவி: 8 காண்க)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 10: 27 - அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ``நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள். மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை' என்றார்'' (மத்தேயு 9:16)

இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ''பாவிகள்'' என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ''பாவிகளோடு'' சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார். -- பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றலாகாது எனவும் இயேசு கற்பிக்கிறார். இயேசுவின் வருகையோடு புதியதொரு யுகம் பிறந்துவிட்டது. எனவே, மக்கள் தம் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிய பார்வையோடு கடவுளை அணுக வேண்டும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயேசு கொணர்ந்த புதுமை எதில் அடங்கும்? அடிப்படையில் இயேசு கடவுளை நாம் ஒரு புதிய ஒளியில் பார்க்க வழிவகுத்தார். கடவுள் மனிதரைவிட்டு அகன்று இருப்பவர் அல்ல. அவர் மனித இனத்தோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டு விட்டார். இது ஒரு புதுமையான நிலையே. மேலும், கடவுள் மனிதரை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவருடைய பார்வையில் எல்லா மனிதரும் சமமே. ஏனென்றால் உலக மனிதர் அனைவரும் அவருடைய பிள்ளைகளே. இவ்வாறு கடவுள் பற்றி ஒரு புதிய பார்வையை இயேசு நமக்கு வழங்குகிறார். புதுப் பார்வை பெற்ற நாம் புது முறையில் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் துலங்கிய மனநிலையும் அவருடைய பார்வையும் நமதாக மாறினால் நாம் புது மனிதராக வாழ்ந்திடுவோம்.

மன்றாட்டு:
இறைவா, ஊறிப்போன பழைய சிந்தனையைக் கைவிட்டு, புதிய பார்வை பெற்று வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.