பொதுக்காலம் - 14 ஆம் வாரம்

வெள்ளி ஜுலை , 13.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: ``தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ' என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்'' எனச் சொல்லுங்கள். அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்து விட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம்போல் இருக்கும்; லெபனோனைப் போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பி வந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமை போல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 51: 1-2. 6-7. 10-11. 12,15 (பல்லவி: 15b)

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி

6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். 7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 16: 13 - அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: ``இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு சீடரை நோக்கி, 'பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:16)

நற்செய்தி அறிவிக்க தம் சீடர்களை அனுப்பிய இயேசு அவர்களுக்குப் பல அறிவுரைகள் வழங்கினார். நற்செய்தி அறிவிப்போர் எதிர்ப்புகளைச் சந்திப்பர் என்பது உறுதி. ஏனென்றால் இறையாட்சியின் மதிப்பீடுகள் இவ்வுலகப் பாணியில் அமைந்த மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கும்; அவற்றைப் புரட்டிப் போடும். அவ்வேளைகளில் எதிர்ப்புகள் எழும். இந்த எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இயேசுவின் சீடர்களை வாட்டுகின்ற ஒரு முக்கியமான பிரச்சினையே. இதற்கும் இயேசு வழிசொல்கிறார். அதாவது, சீடர்களுக்குத் துணையாக ''தந்தையின் ஆவியார்'' இருந்து செயலாற்றுவார் (மத் 10:20). இந்த ஆவியாரின் துணை கிறிஸ்தவ சமூகத்திற்கு என்றுமே உண்டென இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி குறிப்பாக யோவான் நற்செய்தியில் விரிவாகக் காணப்படுகிறது (காண்க: யோவா 16:1-15). கடவுளின் துணை நமக்கு இருப்பதால் இயேசுவின் சீடர்களாகிய நாம் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. -- இருப்பினும் இயேசு தம் சீடர்கள் மூடத் துணிச்சலோடு நடத்தலாகாது என்பதைக் குறிப்பிடும் விதத்தில், ''பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்'' என்னும் அறிவுரையை வழங்குகின்றார் (மத் 10:16). பாம்பு தனக்கு ஆபத்து வருகின்ற வேளையில் தப்பித்து ஓடப் பார்க்கும்; ஆனால் தப்பியோட வழியில்லாத நிலையில் தன்னைத் தாக்க வருகின்றவரை எதிர்த்துத் தாக்கத் தயங்காது. எனவே, ''முன்மதி'' என்னும் நற்பண்புக்குப் பாம்பு உருவகம் ஆயிற்று. அதுபோல, புறா பொதுவாக அமைதியின் சின்னமாகக் கருதப்படுவது. மாபெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உலகமே மூழ்கவிருந்தபோது கடவுள் நோவாவையும் அவருடன் இருந்தவரையும் காப்பாற்றிய கதை தொடக்க நூலில் கூறப்படுகிறது. அப்போது வெள்ளப் பெருக்கு முடிவுற்று ஆபத்து நீங்கியது என அறிந்துகொள்ளும் விதத்தில் புறா தன் அலகில் ஒலிவ இலையைக் கொணர்ந்ததை நோவா புரிந்துகொண்டார் (தொநூ 8:6-12). எனவே அமைதியையும் கபடற்ற தன்மையையும் நல்லிணக்கம் கொணர உழைப்பதையும் காட்டுகின்ற சின்னமாகப் புறா உள்ளது. சீடர்களிடம் இப்பண்புகளும் துலங்க வேண்டும். எனவே, நாம் அமைதியை நிலைநாட்டும் மனிதர்களாகக் கபடற்ற உள்ளத்தோடு செயல்பட அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் கால இடச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்மதியோடு செயல்படுகின்ற பண்பும் நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, அமைதியின் தூதுவர்களாக நாங்கள் முன்மதியோடு செயல்பட அருள்தாரும்.