பொதுக்காலம் - 15 ஆம் வாரம்

வியாழன் ஜுலை , 19.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9,12,16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர். ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 102: 12-14. 15-17. 18, 20,19 (பல்லவி: 19b)

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 11: 28 - அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என்றார்'' (மத்தேயு 11:30)

பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள ''சீராக்கின் ஞானம்'' என்னும் நூலின் இறுதியில், கடவுளிடமிருந்து வருகின்ற கொடையாகிய ஞானம் ஒரு நுகத்திற்கு ஒப்பிடப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நமக்கு அளித்து, கடவுளின் கட்டளைகளையும் நமக்குத் தெரியப்படுத்துகின்ற ஞானம் நம்மை அழுத்துகின்ற சுமையல்ல, மாறாக நமக்கு வழிகாட்டுகின்ற பயணத் துணை (காண்க: சீஞா 53:26). எகிப்து நாட்டில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரயேலரை அழுத்தியது ஒரு ''நுகத்தடி'' (காண்க: லேவி 26:13). அதுபோலவே, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மக்களும் ஒரு நுகத்தைச் சுமந்தனர் (காண்க: எசா 47:6). இத்தகைய சுமைகளைச் சுமந்து, களைப்புற்று அவதிப்பட்ட மக்களுக்குக் கடவுள் அளித்த ஒரு ''நுகம்'' இருந்தது (காண்க: எரே 2:20). அது கடவுள் வழங்கிய ''திருச்சட்டம்'' ஆகும். நீதியையும் உண்மையையும் நாடிச் செயல்படுத்துவதே அச்சட்டம் மனிதருக்க அளிக்கின்ற பொறுப்பு (காண்க: எரே 5:1,5). -- இயேசு நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' நம்மீது சுமத்தப்படுகின்ற பளு அல்ல. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு அளிக்கின்ற புதிய விளக்கமே அவர் நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' (காண்க: மத் 5:17-20). இயேசுவின் நுகம் ''அழுத்தாது''; அதன் சுமை ''எளிது'' (மத் 11:30). இதனால் இயேசு திருச்சட்டத்தை அழித்துவிட்டார் என்று பொருளாகாது. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு வேரோட்டமான ஒரு புதிய விளக்கம் தருகிறார் (காண்க: மத் 5:21-48; 10:16-23). இயேசு நமக்குத் தருகின்ற கட்டளைகள் பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தைவிட ''கடினமாக'' இருக்கலாம். ஆனால், அவை நம்மை அடிமைப்படுத்துவதில்லை; மாறாக, நமக்கு சுதந்திரம் அளிக்கின்றன; நம்மை எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கின்றன. பரிசேயர் திருச்சட்டத்திற்கு அளித்த விளக்கங்கள் மக்களை அடிமைப்படுத்தின (காண்க: மத் 23:4). மாறாக, இயேசு நமக்கு ''இளைப்பாறுதல்'' தருவதாக வாக்களிக்கிறார் (மத் 11:28). இந்த ''ஓய்வு'' படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஓய்வெடுத்ததை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் படைப்புப் பொருள்களுக்கும் இடையே நல்லுறவு நிலவும்போது இந்த ஓய்வு நமதாகும். அப்போது கடவுளின் ஓய்வில் நாமும் பங்கேற்று அந்த அமைதியில் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் சுமைகளை எளிதாக்குபவர் நீரே என உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.