பொதுக்காலம் - 16 ஆம் வாரம்

செவ்வாய் ஜுலை , 24.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 1-9

உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று. �சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது� என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங் காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன. அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: �நீ உன் மகன் செயார்யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்: நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக் கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள். சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி, �யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச் சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப் பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்� என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.� ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: �அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு; தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்). எப்ராயிமின் தலைநகர் சமாரியா; சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்.�

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 48: 1-2ய. 2b-3. 4-5. 6-7 (பல்லவி: 8ன)

பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை; அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். பல்லவி

4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; 5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். பல்லவி

16bஉன `என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். 7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 95: 8b,7 - அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24

அக்காலத்தில் இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''ஒருவர் இயேசுவை நோக்கி, 'அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்' என்றார்'' (மத்தேயு 12:46)

இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் இடையே எத்தகைய உறவு நிலவியது? அந்த உறவு சுமூகமாக அமைந்ததா, அல்லது இழுபறிகள் இருந்தனவா? இயேசு தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றது உண்மை. ''நான் உன் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்று அவர் தம் பெற்றோரைப் பார்த்துக் கூறியதாக லூக்கா எழுதுகிறார் (காண்க: லூக் 2:48-49). எனவே, சாதாரண குடும்ப உறவுகளைத் துறந்துவிட்டு, தம் பணியிலேயே இயேசு முழுக் கவனத்தையும் செலவிட்டார். இயேசுவைப் பார்த்துப் பேசுவதற்காக அவருடைய தாயும் ''சகோதரர்களும்'' வருகிறார்கள் (மத் 12:46). இதிலிருந்து மரியாவுக்கு இயேசுவைத் தவிர பிற குழந்தைகள் இருந்தனர் என நாம் முடிவுசெய்ய இயலாது. நெருங்கிய உறவினரையும் ''சகோதரர்'' என்றழைக்கும் பழக்கம் இருந்தது. எதற்காக அவர்கள் இயேசுவைத் தேடினார்கள் என்பது குறிக்கப்படவில்லை. அவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக இருந்தார்களா, எதிராக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. இயேசுவைப் பின்செல்வோர் குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (காண்க: மத் 10:34-39). இயேசுவின் சொந்தக் குடும்பத்திலும் அந்நிலை இருந்ததா? -- இயேசுவின் குடும்பத்தினர் பற்றி இங்கே வருகின்ற குறிப்புக்குப் பிறகு நற்செய்தி நூலில் அவர்கள் பற்றிய குறிப்பு வரவில்லை. இயேசு உருவாக்கிய குடும்பம் ஒன்று இருந்தது. அது இரத்த உறவின் அடிப்படையில் எழுகின்ற குடும்பம் அல்ல. மாறாக, கடவுள் இயேசு வழியாக அறிவித்த நற்செய்தியை ஏற்று, இயேசுவைப் பின்செல்ல யார் யார் முன்வருகிறார்களோ அவர்கள் இயேசுவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ''விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என இயேசு கூறுகின்ற சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 12:50). கடவுளின் குடும்பத்தில் உறுப்பினராக இருப்போர் கடவுளின் வழியில் நடப்பவர்களே. எனவேதான் இயேசுவின் சீடர்களாக வாழ்வோர் இயேசுவின் குடும்பத்தில் உறுப்பினராக மாறுகின்றனர். கடவுளைத் தம் தந்தையாக ஏற்று, பிற மனிதரைச் சகோதர உணர்வோடு மதித்துப் போற்றிட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:
இறைவா, நாங்கள் உம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்னும் உணர்வோடு ஒன்றித்து வாழ்ந்திட அருள்தாரும்.