பொதுக்காலம் - 16 ஆம் வாரம்

வெள்ளி ஜுலை , 27.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்; நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன். என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை பற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அக்காலத்தில் எருசலேமை `ஆண்டவரின் அரியணை' என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


எரே 31: 10. 11-12யb. 13 (பல்லவி: 10ன)

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி

7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். 8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்; அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும். பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 8: 15 - அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்' என்றார்'' (மத்தேயு 13:23)

இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்த இயேசு உவமைகள் வழி மக்களுக்குப் போதித்தார். இந்த உவமைகள் தனித்தன்மை வாய்ந்த கதைகள். அவை பொதுவாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்ற பண்புடையவை. இயேசுவின் உவமைகளைக் கேட்ட மக்கள் கடவுளின் வார்த்தையை ஏற்று, அது விடுக்கும் சவாலுக்குப் பதிலளிக்க அழைக்கப்பட்டார்கள். பொதுவாக இயேசு உவமைகளை விளக்கி, அவற்றின் பொருள் இதுதான் என்று கூறுவதில்லை. நற்செய்தி நூல்களில் இரு உவமைகளுக்கு மட்டுமே இயேசு விளக்கம் அளித்தார். அவை விதைப்பவர் பற்றிய உவமையும் (மத் 13-19), வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையும் ஆகும் (மத் 13:36-43). இந்த விளக்கங்கள் இயேசுவால் நேரடியாக வழங்கப்பட்டன என்பதைவிட, தொடக்க காலத் திருச்சபை இயேசுவின் உவமைகளை எவ்வாறு புரிந்துகொண்டது என்பதையே காட்டுகின்றன என அறிஞர் கருதுகின்றனர். -- உவமையில் வருகின்ற நிலங்கள் நான்கு வகை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பு கொண்டவை. வழியோரப் பகுதி, பாறைப் பகுதி, முட்செடிப் பகுதி, நல்ல நிலம் என நான்கு வகை நிலங்களும் விவரிக்கப்படுகின்றன. இறைவார்த்தையைக் கேட்கின்ற மனிதர்கள் எல்லாருமே முழு மனத்தோடு அதைக் கேட்டு, உள்ளத்தில் ஏற்று, அதன்படி செயல்பட முன்வருவதில்லை என இந்த உவமை காட்டுகிறது. நல்ல நிலம் என்றால் என்ன? நம்மைத் தேடி வருகின்ற இறைவார்த்தையை நாம் ஏற்க முன்வர வேண்டும் (வழியோரப் பகுதி). இறைவார்த்தை நம்மில் ஆழமாக வேரூன்றி உறுதியாக நிலைக்க வேண்டும் (பாறைப் பகுதி). கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற உலகக் கவலை மற்றும் செல்வ மாயைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையைக் காத்திட வேண்டும் (முட்செடிப் பகுதி). இவ்வாறு செயல்படுவோர் பண்பட்ட, நல்ல நிலமாக இருந்து இறைவார்த்தை என்னும் விதையைத் தம்முள் ஏற்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இறைவார்த்தை வேரூன்றி வளரும்; சுவைமிகுந்த கனியைக் கொடுக்கும். நாம் நல்ல நிலமாக விளங்க வேண்டும் என்றால் நம் இதயம் பண்பட வேண்டும்; நம் சிந்தனைகள் கடவுளின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும்; நம் உணர்வுகள் கடவுளின் விருப்பத்திற்கேற்ப நெகிழ்ச்சி பெற வேண்டும்; நம் செயல்கள் அவருடைய திட்டப்படி வடிவம் ஏற்க வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் வார்த்தையை ஏற்க எங்கள் உள்ளத்தைப் பண்படுத்தியருளும்.