பொதுக்காலம் - 17 ஆம் வாரம்

திங்கள் ஜுலை , 30.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: ``நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.'' ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: ``நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'' ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன். பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: ``எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.'' அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது. அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


இச 32: 18-19, 20-21 (பல்லவி: 18ய)

பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.

18 `உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'. 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யாக் 1: 18 - அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.'' அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை'' (மத்தேயு 13:34)

இயேசு மக்களுக்கு வழங்கிய போதனையில் பெரும்பகுதி உவமைகள் வழியாகவே வழங்கப்பட்டது என்பது உண்மை. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு கூறிய உவமைகள் பல அடங்கியுள்ளன. உவமைக்கும் கதைக்கும் இடையே சில ஒற்றுமைகளை நாம் காணலாம். ஆயினும் அவற்றிற்கிடையே பல வேற்றுமைகளும் உண்டு. இயேசு கூறிய உவமைகள் மக்களை மகிழ்விப்பதற்காகக் கூறப்பட்ட கட்டுக் கதைகளோ, கற்பனைச் சித்திரங்களோ அல்ல. இயேசுவின் உவமைகள் கடவுளாட்சி இவ்வுலகில் வருவது பற்றியும் அந்த ஆட்சியின் தன்மை பற்றியும் அமைந்திருந்தன. அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைகளைக் கேட்ட மனிதர்களை இயேசு சிந்திக்கத் தூண்டினார். கருத்தளவிலான உண்மைகளை வாழ்க்கையோடு எவ்விதத் தொடர்புமின்றி எடுத்துக் கூறுவதன்று இயேசுவின் பாணி. அவர் மக்களின் வாழ்க்கையைத் தொடுகின்ற விதத்தில், அவர்கள் எளிதாகக் கண்டுகொள்கின்ற ஆள், இடம், பொருள் போன்றவற்றை உள்ளடக்கிய கதைகளை எடுத்துச் சொன்னார். இயேசு சொன்ன உவமைகளில் சிறப்பு மிக்கவை பல உண்டு. எடுத்துக்காட்டாக, ''நல்ல சமாரியர்'', ''காணாமற்போன மகன்'' போன்ற உவமைகளைக் கூறலாம். -- இயேசுவின் போதனைகளில் மட்டும்தான் உவமைகள் உண்டு என்பது சரியல்ல. இயேசு புரிந்த அரும் செயல்களும் உவமைகளாக மாறின. எடுத்துக்காட்டாக, இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்ச்சியை நம்முடைய பகுத்தறிவால் விளக்கமுடியாத ஒரு அதிசயச் செயலாக மட்டுமே பார்த்தால் அச்செயலின் உட்பொருளைக் காண நாம் தவறிவிடுவோம். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான கல் தொட்டிகளைத் தண்ணீரால் நிரப்பி அத்தண்ணீரை இயேசு சுவையான இரசமாக்கினார். பழையன கழிந்து புதியன பிறக்கும் காலம் வந்துவிட்டது என இயேசு இச்செயல் வழியாக அறிவித்தார். இயேசுவின் வருகையால், அவருடைய போதனை மற்றும் செயல்களால் கடவுளின் ஆட்சி என்னும் புதுமை இவ்வுலகில் வரத் தொடங்கிவிட்டது என இச்செயல் காட்டுகிறது. எனவே, உவமைகள் இயேசுவின் சொல் மற்றும் செயல்களில் வெளிப்பட்டன எனலாம். இன்னும் துல்லியமாகப் பார்த்தால் இயேசுவே ''கடவுளின் உவமை'' என்றுகூட நாம் சொல்லலாம். அதாவது இயேசுவைப் புறக்கண்களால் மட்டுமே பார்த்தவர்கள் அவரிடத்தில் கடவுளின் வல்லமை துலங்கியதை உணரவில்லை. ஆனால், தம் அகக்கண்களைத் திறந்து, இதயக் கதவுகளை அடைத்து மூடாமல் இயேசுவை அணுகிய மக்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொண்டார்கள். அவர்கள்தான் இயேசுவை உண்மையாகவே ''நம்பியவர்கள்''. இவ்வாறு நம்பிக்கை கொள்ள இயேசு இன்று நம்மை அழைக்கிறார். நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோர் கடவுளின் உவமையாகிய இயேசுவை அடையாளம் காண்பதோடு, அவரை நம் மீட்பராக நமக்களித்த தந்தையாம் கடவுளையும் நம்மோடு குடிகொண்டு நம்மை வழிநடத்தும் தூய ஆவியையும் அடையாளம் கண்டு, வாழ்க்கையில் அனுபவித்து உணர்வர்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவின் வெளித்தோற்றத்தைத் தாண்டிச் சென்று, அவர் வெளிப்படுத்துகின்ற உட்பொருளைக் கண்டுணர எங்களுக்கு அருள்தாரும்.