பொதுக்காலம் - 17 ஆம் வாரம்

செவ்வாய் ஜுலை , 31.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர். நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது! ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 79: 8. 9. 11,13 (பல்லவி: 9உ)

பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை'' (மத்தேயு 13:34)

இயேசு மக்களுக்கு வழங்கிய போதனையில் பெரும்பகுதி உவமைகள் வழியாகவே வழங்கப்பட்டது என்பது உண்மை. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு கூறிய உவமைகள் பல அடங்கியுள்ளன. உவமைக்கும் கதைக்கும் இடையே சில ஒற்றுமைகளை நாம் காணலாம். ஆயினும் அவற்றிற்கிடையே பல வேற்றுமைகளும் உண்டு. இயேசு கூறிய உவமைகள் மக்களை மகிழ்விப்பதற்காகக் கூறப்பட்ட கட்டுக் கதைகளோ, கற்பனைச் சித்திரங்களோ அல்ல. இயேசுவின் உவமைகள் கடவுளாட்சி இவ்வுலகில் வருவது பற்றியும் அந்த ஆட்சியின் தன்மை பற்றியும் அமைந்திருந்தன. அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைகளைக் கேட்ட மனிதர்களை இயேசு சிந்திக்கத் தூண்டினார். கருத்தளவிலான உண்மைகளை வாழ்க்கையோடு எவ்விதத் தொடர்புமின்றி எடுத்துக் கூறுவதன்று இயேசுவின் பாணி. அவர் மக்களின் வாழ்க்கையைத் தொடுகின்ற விதத்தில், அவர்கள் எளிதாகக் கண்டுகொள்கின்ற ஆள், இடம், பொருள் போன்றவற்றை உள்ளடக்கிய கதைகளை எடுத்துச் சொன்னார். இயேசு சொன்ன உவமைகளில் சிறப்பு மிக்கவை பல உண்டு. எடுத்துக்காட்டாக, ''நல்ல சமாரியர்'', ''காணாமற்போன மகன்'' போன்ற உவமைகளைக் கூறலாம். -- இயேசுவின் போதனைகளில் மட்டும்தான் உவமைகள் உண்டு என்பது சரியல்ல. இயேசு புரிந்த அரும் செயல்களும் உவமைகளாக மாறின. எடுத்துக்காட்டாக, இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்ச்சியை நம்முடைய பகுத்தறிவால் விளக்கமுடியாத ஒரு அதிசயச் செயலாக மட்டுமே பார்த்தால் அச்செயலின் உட்பொருளைக் காண நாம் தவறிவிடுவோம். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான கல் தொட்டிகளைத் தண்ணீரால் நிரப்பி அத்தண்ணீரை இயேசு சுவையான இரசமாக்கினார். பழையன கழிந்து புதியன பிறக்கும் காலம் வந்துவிட்டது என இயேசு இச்செயல் வழியாக அறிவித்தார். இயேசுவின் வருகையால், அவருடைய போதனை மற்றும் செயல்களால் கடவுளின் ஆட்சி என்னும் புதுமை இவ்வுலகில் வரத் தொடங்கிவிட்டது என இச்செயல் காட்டுகிறது. எனவே, உவமைகள் இயேசுவின் சொல் மற்றும் செயல்களில் வெளிப்பட்டன எனலாம். இன்னும் துல்லியமாகப் பார்த்தால் இயேசுவே ''கடவுளின் உவமை'' என்றுகூட நாம் சொல்லலாம். அதாவது இயேசுவைப் புறக்கண்களால் மட்டுமே பார்த்தவர்கள் அவரிடத்தில் கடவுளின் வல்லமை துலங்கியதை உணரவில்லை. ஆனால், தம் அகக்கண்களைத் திறந்து, இதயக் கதவுகளை அடைத்து மூடாமல் இயேசுவை அணுகிய மக்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொண்டார்கள். அவர்கள்தான் இயேசுவை உண்மையாகவே ''நம்பியவர்கள்''. இவ்வாறு நம்பிக்கை கொள்ள இயேசு இன்று நம்மை அழைக்கிறார். நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோர் கடவுளின் உவமையாகிய இயேசுவை அடையாளம் காண்பதோடு, அவரை நம் மீட்பராக நமக்களித்த தந்தையாம் கடவுளையும் நம்மோடு குடிகொண்டு நம்மை வழிநடத்தும் தூய ஆவியையும் அடையாளம் கண்டு, வாழ்க்கையில் அனுபவித்து உணர்வர்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவின் வெளித்தோற்றத்தைத் தாண்டிச் சென்று, அவர் வெளிப்படுத்துகின்ற உட்பொருளைக் கண்டுணர எங்களுக்கு அருள்தாரும்.