பொதுக்காலம் - 17 ஆம் வாரம்

வியாழன் ஆகஸ்ட் , 02.08.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6

எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: ``நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.'' எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: ``இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 146: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 5ய)

பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.

1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4 அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். பல்லவி

9 நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண். 10 என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி

16 நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். 17 என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திப 16: 14b - அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்" (மத்தேயு 13:47)

இயேசு தம் சீடராகத் தெரிந்துகொண்டவர்களுள் பலர் மீனவர். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோர் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசுவால் அழைக்கப்பட்டு, அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். சீடர்கள் மீன்பிடித்த இடம் கடல்போல் விரிந்து பரந்த "கெனசரேத்து ஏரி" ஆகும் (லூக்கா 5:1). இதுவே மக்களால் "கலிலேயக் கடல்" என்றும் "திபேரியக் கடல்" என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஏரியில் வலைவீசி மீன்பிடித்தல் கலிலேயாவில் நடந்த முக்கிய தொழிலாகும். இந்தக் கலிலேயப் பகுதியில்தான் இயேசுவின் பணி பெருமளவு நிகழ்ந்தது. கலிலேயக் கடல் என்றழைக்கப்பட்ட அந்த ஏரியின் பரப்பளவு 166 சதுர கிலோமீட்டர்; ஆழம் சுமார் 30 மீட்டர். இந்த ஏரியில் மீன்பிடிக்க வலைவீசும்போது பல மீனவர் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுவர். அவர்கள் வீசிய வலையில் விழுகின்ற மீன்கள் பலவகையாக இருக்கும். சமைத்து உண்பதற்குத் தகுந்த நல்ல மீன்களும் சமையலுக்குப் பயன்படாத மீன்களும் பிற உயிரினங்களும் வலையில் அகப்படும். வலையைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்தபின் மீனவர் நல்ல மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயனற்றவற்றை வெளியே எறிந்துவிடுவர். இந்த நிகழ்ச்சியை இயேசு எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தார். அது இயேசுவின் வாயில் இறையாட்சி பற்றிய ஓர் உவமையாக உருவெடுத்தது. வலையில் அகப்பட்ட நல்ல மீன்களை எடுத்துக்கொண்டு கெட்ட மீன்களை விட்டுவிடுவதுபோல கடவுளாட்சியின் இறுதியிலும் கடவுள் நல்லவர்களைத் தீயோரிடமிருந்து பிரித்துத் தீர்ப்பு வழங்குவார். -- இவ்வுலகில் கடவுளாட்சி படிப்படியாக வளர்கின்ற காலத்தில் வலையில் நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் படுவதுபோலவே கடவுளாட்சியிலும் நல்லவரும் இருப்பர், தீயவரும் இருப்பர். இவர்களை வேறுபடுத்திப் பார்த்து, ஒருசிலரை ஏற்றுப் பிறரை ஒதுக்கிவைப்பது நம் பொறுப்பு அல்ல. கடவுள்தாமே மக்களில் நல்லவர் யார் என்றும் தீயவர் யார் என்றும் இறுதிக்காலத்தில் தீர்ப்பு வழங்குவார். எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் அன்போடு ஏற்று வரவேற்பதே நம் கடமை. தீர்ப்பு வழங்கும் உரிமை கடவுளுக்கே உண்டு. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கான திறமையை நாம் கடவுளிடமிருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டும். நன்மையைத் தேர்ந்துகொண்டு தீமையை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், பிற மனிதரை நல்லவர் தீயவர் எனத் தீர்ப்பிடும் பொறுப்பைக் கடவுளிடமே விட்டுவிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட அருள்தாரும்.