பொதுக்காலம் - 18 ஆம் வாரம்

திங்கள் ஆகஸ்ட் , 06.08.2012


ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா


முதல் வாசகம்



இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9ய,1ய)

பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம். எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 17: 5 - அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ``மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6). -- இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.