பொதுக்காலம் - 20 ஆம் வாரம்

செவ்வாய் ஆகஸ்ட் , 21.08.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், `நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்' என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது. ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் `நானே கடவுள்' என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


இச 32: 26-27. 28,30. 35உன-36யb (பல்லவி: 39உ)

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

26 நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். 27 ஆயினும், `எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!' என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். பல்லவி

28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. 30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி

35உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36யb அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


2 கொரி 8: 9 - அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''பேதுரு இயேசுவைப் பார்த்து, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார்'' (மத்தேயு 19:27)

இயேசுவைப் பின்பற்றும் ஆவலோடு வந்தார் செல்வரான ஓர் இளைஞர். ஆனால், தம் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல அவருக்குத் துணிவு இருக்கவில்லை. தமக்கும் அந்த இளைஞருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைப் பின்னணியாகக் கொண்டு இயேசு, ''செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்'' என்றார் (மத் 19:23). செல்வத்திற்கும் இறையாட்சிக்கும் இடையே என்ன உறவு? செல்வம் இருந்தால் இறையாட்சியில் புக முடியாதா? இக்கேள்விகள் தொடக்க காலத் திருச்சபையில் எழுந்தன. யூத மரபைப் பார்க்கும்போது செல்வம் என்பது நல்லதையும் குறிக்கும் நல்லது செய்யத் தடையாகவும் இருக்கும். இவ்வுலக செல்வங்களை ஏராளமாகக் கொண்டிருக்கும் மனிதர் கடவுளின் ஆசியைப் பெற்றவர் என்னும் கருத்து அக்காலத்தில் நிலவியதுண்டு. எடுத்துக்காட்டாக யோபுவின் வரலாற்றைக் காட்டலாம். அங்கே யோபு கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்தியதால் கடவுள் அவருக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார் என்னும் கருத்து உள்ளது (காண்க: யோபு 1:1-12; 42:10). கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நற்பண்புகள் துலங்குகின்ற வாழ்க்கை நடத்துவோர் கடவுளிடமிருந்து செல்வங்களைப் பெறுவர் என இணைச்சட்ட நூலும் கூறுகிறது (காண்க: இச 28:1-14). அதே நேரத்தில் செல்வம் என்பது மனிதரைக் கடவுளிடம் இட்டுச் செல்வதற்கு மாறாக, மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே நிலவ வேண்டிய உறவுக்குத் தடையாக அமைந்துவிடலாம் என்னும் கருத்தும் விவிலியத்தில் உண்டு. குறிப்பாக, இறைவாக்கினர் செல்வத்தின் தீய விளைவுகள் பற்றிக் கடுமையான தீர்ப்பு அளித்தனர். எடுத்துக்காட்டாக, ஆமோஸ் இறைவாக்கினர் பேராசை கொண்டு ''வறியோரை நசுக்கி, ஏழைகளைச் சுறண்டி'' செல்வம் திரட்டிய மனிதரைக் கடுமையாகக் கண்டிக்கிறார் (காண்க: ஆமோ 8:4-6). செல்வம் என்பது மனித இதயத்தைக் கெடுத்துவிடக் கூடும் என்னும் இயேசுவின் போதனையை நாம் யூத மரபின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். -- கடவுள் ''நிறைவுள்ளவராய்'' இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவராய் மாற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் ஒரு தடையாக இராதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற கடவுளின் ''நிறைவை'' நாம் அடைய வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம் (காண்க: மத் 5:28). இது ஒருசிலருக்கு மட்டுமே விடுக்கப்படுகின்ற சிறப்பு அழைப்பு அல்ல. மாறாக, எல்லா மனிதரும் நிறைவடைய வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம். மனித முயற்சியால் மட்டுமே இது நிகழும் என நாம் எதிர்பார்த்தல் ஆகாது. மாறாக, நமக்குக் கடவுளின் அருள்துணை தேவைப்படுகிறது. செல்வத்தைத் துறந்துவிடுவது மடமை என உலகம் கருதலாம். ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் நாம் அவரை முழுமையாக நம் வாழ்வில் ஏற்று, அவரையே முழுமையாகப் பற்றிக்கொள்ள வேண்டும். உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு, கடவுளையே பற்றிக்கொள்ள முன்வருவது கடினமே. ஆனால் கடவுளின் துணைகொண்டு நாம் எதையும் சாதிக்க முடியும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுளால் ஆசிபெற்றவர்களாகக் கருதப்பட்ட செல்வர்களுக்கே விண்ணகம் புகுவது கடினம் என்றால் யார்தான் மீட்புப் பெற முடியும் என்று கூறி வியப்படைந்த சீடர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கும் பொருந்தும்: ''மனிதரால் இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' (மத் 19:25-26). ஆக, கடவுளையும் அவர் பெயரால் நம் மீட்பராக வந்த இயேசுவையும் நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு, இறையுறவிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற பற்றுக்களை அறுத்துவிட அழைக்கப்படுகிறோம். அப்போது ''நிலைவாழ்வை உரிமைப் பேறாக அடைவோம்'' (மத் 19:29).

மன்றாட்டு:
இறைவா, தூய்மையான உள்ளத்தோடு உம்மையே நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.