பொதுக்காலம் - 22 ஆம் வாரம்

செவ்வாய் ஆகஸ்ட் , 04.09.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ``ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?'' நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 145: 8-9. 10-11. 12-13யb. 13உன-14 (பல்லவி: 17ய)

பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 7: 16 - அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், ``ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று உரத்த குரலில் கத்தியது. ``வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, ``எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''ஓய்வு நாள்களில் இயேசு (கப்பர்நாகும்) தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்துவந்தார்'' (மாற்கு 1:21)

இயேசு தலைசிறந்த ஆசிரியரும் போதகருமாக விளங்கினார். அவர் ஆற்றிய பணியில் முக்கியமான ஒன்று கற்பிக்கும் பணி என்றால் மிகையாகாது. முற்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கற்பித்ததுபோல, எசாயா போன்ற இறைவாக்கினர் போதித்ததுபோல, இயேசுவும் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் எடுத்துரைத்தார். இவ்வாறு போதிப்பதற்கு இயேசு தேர்ந்துகொண்ட இடம் யூதர்களின் ''தொழுகைக் கூடம்'' ஆகும். இத்தகைய தொழுகைக் கூடம் ஒன்று கப்பர்நாகும் ஊரில் இருந்தது. அவ்வூருக்கு இயேசு அடிக்கடி செல்வது வழக்கம். தற்கால அகழ்வாராய்ச்சியின் பயனாக அவ்வூர்த் தொழுகைக் கூடம் பற்றிய தடயங்கள் கிடைத்துள்ளன. இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் குழுமி வந்தனர். இயேசு ''மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்துவந்தார்'' (மாற் 1:22) என்னும் குறிப்பு கருதத்தக்கது. இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது என்பதன் பொருள் என்ன? இயேசு கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்த வேளையில் வெறும் சொற்களை மட்டும் பயன்படுத்தவில்லை. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே எடுத்துக் கூறவும் இல்லை. மாறாக, தம் தந்தையாகிய கடவுளோடு தமக்கிருந்த நெருங்கிய உறவின் ஆழத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டார். -- கடவுளோடு நமக்கிருக்கும் உறவு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே, தாய்க்கும் சேய்க்கும் இடையே நிலவுகின்ற உறவுக்கு ஒப்பானது. நாம் கடவுளையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம். இயேசுவும் மக்களுக்குப் போதித்தபோது கடவுள் யார் என்பதைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு மாறாக, கடவுள் யார் என்பதை இயேசு தம் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ''அதிகாரம்'' இருந்தது. இயேசு கடவுளின் உறவை மனிதரோடு பகிர்ந்துகொண்டார். அந்த உறவை அனுபவித்தவர்கள் அவருடைய அதிகாரத்தையும் கண்டுகொண்டார்கள். இயேசு நம் ஆசிரியர் என்றால், அவரது பள்ளியில் பயில்கின்ற மாணவர் நாம் என்றால் அவரிடமிருந்த கற்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவின் போதனையை ஏற்க எங்கள் இதயங்களைத் திறந்தருளும்.