பொதுக்காலம் - 22 ஆம் வாரம்

வியாழன் ஆகஸ்ட் , 06.09.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23

சகோதரர் சகோதரிகளே, எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ``ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.'' மேலும் ``ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.'' எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 24: 1-2. 3-4யb. 5-6 (பல்லவி: 1ய)

பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 4: 19 - அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில் இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' (மத்தேயு 4:19)

இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தபோது அவர்கள் தம்மைப் பின்செல்ல வேண்டும் எனக் கேட்டார். இவ்வாறு இயேசு விடுத்த அழைப்பைச் சிலர் ஏற்றனர்; சிலர் ஏற்கவில்லை. ஆயினும் ஒருசில மனிதரை இயேசு தனிப்பட்ட முறையில் அழைத்தார் என எல்லா நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 4:18-22; மாற் 1:15-20; லூக் 5:1-11; யோவா 1:35-51). இவ்வாறு இயேசு தம் சீடர்களை அழைத்தார் என்பது சிறப்பு வாய்ந்த நிகழ்வுதான். இயேசு வாழ்ந்த காலத்தில் பல யூத குருக்களும் அறிஞர்களும் யூத சமய நெறியை மக்களுக்கு விளக்கியுரைத்தனர். அவர்களிடம் பாடம் கற்க விரும்பியோர் அந்த அறிஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் சீடர்களாகச் சேர்ந்தார்கள். ஆனால் இயேசுவோ தம்மோடு நெருங்கிய விதத்தில் ஒத்துழைப்பதற்காகப் பன்னிருவரைத் தாமே அழைக்கின்றார். அவர்களுக்குத் ''திருத்தூதர்'' (அப்போஸ்தலர்) என்னும் பெயரையும் அளிக்கின்றார். இது ஒருவேளை தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தலர்'' என வரும் சொல் ''அனுப்பப்பட்டவர்'' (''தூதர்'') என்னும் பொருளைத் தரும். கடவுள் அளிக்கின்ற பணியை நிறைவேற்ற ''வான தூதர்'' இருப்பதுபோல இயேசு அளித்த பணியை நிறைவேற்ற ''திருத்தூதர்'' தெரிந்துகொள்ளப்பட்டனர். இவர்கள் ஆற்றவேண்டிய பணி யாது? அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற பணி ''மனிதரைப் பிடிப்பது''. இங்கே இயேசு திறமையான விதத்தில் சொல் விளக்கம் தருவது தெரிகிறது. அதாவது இதுவரை ''மீன்களைப் பிடித்தவர்கள்'' இனிமேல் ''மனிதர்களைப் பிடிப்பார்கள்'' என்னும் சொல்லாடல் படித்து இன்புறத் தக்கது (மத் 4:19). -- மனிதரைப் ''பிடிப்பது'' எப்படி? மீன் பிடிப்பவர்கள் கடலில் அல்லது ஏரியில் வலைவீசுவார்கள். அதுபோல இயேசுவின் சீடர்களும் உலகு என்னும் கடலில் வலைவீச வேண்டும். அந்த வலை இயேசு நமக்குத் தருகின்ற இறையாட்சிப் போதனையே. இயேசுவின் போதனையை நாம் சொல்லளவில் மட்டுமே எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்விலும் எண்பிக்கும்போது நாம் வீசுகின்ற வலை உறுதியாய் இருக்கும். அந்த வலையில் வந்துசேர்கின்ற மனிதரை நாம் கவனமாகக் கரை சேர்க்க வேண்டும். கரையில் நமக்காகக் காத்திருக்கிறார் இயேசு. இங்கே யோவான் நற்செய்தியில் வரும் நிகழ்ச்சி கருதத்தக்கது. ''ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை'' (யோவா 21:4). இருளின் ஆட்சி முடிகின்ற வேளையில், கதிரவன் வீசுகின்ற ஒளியைப் போல காலைவேளையில் தோன்றுகிறார் இயேசு. அவர் ''கரையில்'' நிற்கிறார். நமக்காகக் காத்திருக்கிறார். ஆனால் நாம் அவரை உடனே அடையாளம் காண்பதில்லை. ஏனென்றால் ஒளிமயமான அவருடைய தோற்றம் நம் கண்களைக் கூசச் செய்கிறது. இருப்பினும், கரைநோக்கி நாம் வரும்போது அவரை அடையாளம் காண்கின்றோம். அவர் மாட்சியோடு விளங்குகின்ற இயேசு என அறிகின்றோம். நாம் பிடித்துவந்த மீன்களை அவரிடம் காணிக்கையாக்குகின்றோம். இயேசுவிடம் மனிதர்களை இட்டுச் செல்கின்ற பணி மாண்புமிக்கதொரு செயல். எனவே இயேசுவுக்காக ''மனிதரைப் பிடிப்பவர்'' ஆவோம்; அவரில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்களாக மாறுவோம்.

மன்றாட்டு:
இறைவா, வலைவீசி மனிதரைப் பிடித்து உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு நீர் அளித்த பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.