பொதுக்காலம் - 23 ஆம் வாரம்

சனி ஆகஸ்ட் , 15.09.2012


தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) நினைவு


முதல் வாசகம்



எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 31: 1-2யb. 2உ-3. 4-5. 14-15. 19 (பல்லவி: 16ய)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். 2யb உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். பல்லவி

2 எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்'' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார்'' (யோவா 19:26)

இயேசு சிலுவையில் தொங்கி, துன்பத்தின் உச்சக் கட்டத்தை எட்டிய வேளையில் சிலுவை அருகில் ஒரு சில பெண்கள் மட்டுமே நின்றுகொண்டிருக்கின்றனர். இயேசுவின் தாயின் அருகில் ''அன்புச் சீடர்'' நிற்கின்றார். இயேசு தம் தாயிடம் அன்புச் சீடரைக் காட்டி, ''அம்மா, இவரே உம் மகன்'' என்கிறார்; அன்புச் சீடரிடம் தம் தாயைக் காட்டி, ''இவரே உம் தாய்'' என்கிறார் (யோவா 19:26-27). இந்த நிகழ்ச்சி யோவான் நற்செய்தியில் மட்டுமே வருகிறது. யோவான் இங்கே ஓர் ஆழ்ந்த பொருளை நமக்கு உணர்த்துகிறார். அதாவது, இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற திருச்சபையின் பிறப்பு இங்கே குறிக்கப்படுகிறது. மரியா திருச்சபையின் தாயாக அறிவிக்கப்படுகிறார். அன்புச் சீடர் இயேசுவில் நம்பிக்கை கொள்வோருக்கு உருவகமாக நிற்கின்றார். சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலா குத்தித் திறக்கப்பட்டதும் ''இரத்தமும் தண்ணீரும் வடிந்தன'' (யோவா 19:34). கிறிஸ்தவ மரபில் தண்ணீர் திருமுழுக்குக்கும் இரத்தம் நற்கருணைக்கும் உருவகமாயின. மேலும், இயேசு இறக்கும் நேரத்தில் கடவுளிடமிருந்து மாட்சிமை பெற்றதோடு, ''தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவா 19:30). மாட்சிமை பெற்ற இயேசு நமக்குத் தூய ஆவியைக் கொடையாக அளித்தது இதனால் குறிக்கப்படுகிறது. இவ்வாறு திருச்சபையின் தோற்றம் அங்கே நிகழ்ந்ததை யோவான் நற்செய்தியாளர் நமக்கு விளக்கியுரைக்கின்றார். -- ஆக, அன்னை மரியா திருச்சபையின் அடையாளம். அவரே திருச்சபையின் தாய். அவர் தம் மக்களை அன்போடு பராமரிக்கிறார். அதுபோல, திருச்சபையை அதன் உறுப்பினரும் (''அன்புச் சீடர்'') அன்போடு பராமரிக்க அழைக்கப்படுகிறார்கள். மரியாவின் மகன் இயேசுவும் அந்த இயேசுவில் நம்பிக்கை கொள்வோரும் உண்மையில் ஒரு குடும்பத்தில் சகோதர உறவில் இணைகின்றனர். இந்த ஆன்மிகக் குடும்ப உறவை நாம் இங்கே காண்கின்றோம். மேலும், மரியா நம் மீட்பின் வரலாற்றிலும் சிறப்பான பங்கேற்கிறார். மனித வரலாற்றில் பாவம் நுழைந்திட ஆதாமோடு முதல் பெண் ஏவாவும் காரணமானார் (காண்க: தொநூ 3:1-13). இப்போதோ மரியா என்னும் புதிய பெண் வழியாகவும் அவருடைய மகன் இயேசு வழியாகவும் நாம் மீட்படைந்து புது வாழ்வில் புகுந்துள்ளோம். சாவு நிலவிய இடத்தில் வாழ்வு பிறந்தது. நம்பிக்கை கொண்டோர் குழுவாகிய திருச்சபை உலகம் முழுவதற்கும் வாழ்வளிக்கும் கருவியாக விளங்கிட அழைக்கப்படுகிறது.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவின் தாய் எங்களுக்கு அளிக்கின்ற முன்மாதிரியை நாங்கள் பின்பற்றி உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.