பொதுக்காலம் - 25 ஆம் வாரம்

புதன் செப்டம்பர் , 26.09.2012


முதல் வாசகம்



நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யன் ஆவாய்; அவர் உன்னைக் கடிந்து கொள்வார். வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், ``உம்மை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்து, ``ஆண்டவரைக் கண்டது யார்?'' என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 119: 29,72. 89,101. 104,163 (பல்லவி: 105ய)

பல்லவி: என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. பல்லவி

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. 101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். பல்லவி

104 உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய் வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன் 163 பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 1: 15 - அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறி விட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்'' (லூக்கா 9:1-2)

இயேசு தம் பணியைத் தொடர்வதற்காகப் பன்னிரு திருத்தூதர்களை அனுப்பிய செய்தியையும், எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பிய செய்தியையும் லூக்கா பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 9:1-6; 10:1-12). இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நிகழ்வின் இரு வடிவங்களாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இயேசுவின் பணியைத் தொடர்வதற்காக அனுப்பப்பட்ட சீடர்களின் வரலாற்றில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் பிரதிபலிப்பதை நாம் காணலாம். இயேசு தம் சீடர்களை அனுப்புவது இரண்டு முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக. அவர்கள் ''இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும்''; ''நற்செய்தியை அறிவிக்க வேண்டும்'' (லூக் 9:2,6). இவ்வாறு பணியாற்றும்போது சீடர்கள் ''உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவார்கள்'' (காண்க: லூக் 9:2). அன்று சீடர்களுக்கு அளித்த பணியை இன்றைய திருச்சபையும் தொடர வேண்டும். இறையாட்சி நம்மிடையே வந்துள்ளது என்னும் நல்ல செய்தியை அறிவிக்கின்ற அதே நேரத்தில் திருச்சபை மக்களின் பிணிகளையும் போக்க வேண்டும். இந்த பிணிகள் பல வகை: உடல், உளம், ஆன்மா சார்ந்த எல்லாவித ஊனங்களும் குறைபாடுகளும் ''பிணிகள்'' எனலாம். கொடிய வறுமையில் வாடுவோர், சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் ஆகிய எல்லா மக்களுமே ஒருவிதத்தில் ''பிணி''களால் அவதிப்படுகிறவர்களே. இவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் அறிவிக்கும் நற்செய்தி என்ன? எல்லாவித அநீதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்க இயேசு வந்தார் என்னும் நற்செய்தியை அறிவிக்காமல் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற இயலாது. -- மேலும் இயேசு ''பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' என்றார் (லூக் 9:3). இந்த அறிவுரை இன்றைய வாழ்க்கைச் சூழமைவுகளுக்குப் பொருந்திப் போகாது என நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு வழங்கிய அறிவுரையின் உட்பொருளை நாம் மறந்துவிடலாகாது. இயேசுவின் பணியைத் தொடர்வோர் உலகப் பார்வையில் செயல்படாமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். அக்காலத்தில் பயணம் சென்றவர்கள் கைத்தடி வைத்துக்கொண்டார்கள். நடக்கும்போது ஊன்றிக்கொள்வதற்கும், வழிப்பறிக்காரர்களிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அது பயன்பட்டது. பையில் உணவுப் பொருள் மற்றும் பணம் போன்றவற்றை வைத்திருந்தார்கள். மாற்று உடையாக ஓர் உள்ளாடையும் பயன்பட்டது. ஆனால் இயேசுவின் சீடர்கள் மற்ற வழிப்போக்கர்கள் போலத் தங்களைக் கருதாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும். அதுபோல, வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும். ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால்.

மன்றாட்டு:
இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.