பொதுக்காலம் - 27 ஆம் வாரம்

திங்கள் அக்டோபர் , 08.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது. சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 111: 1-2. 7-8. 9,10உ (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி

125 உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வேன். 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 13: 34 - அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், ``போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?'' என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது'' என்றார். இயேசு, ``சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்'' என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ``எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ``ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்'' என்றார். ``கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?'' என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், ``அவருக்கு இரக்கம் காட்டியவரே'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''திருச்சட்ட அறிஞரை நோக்கி, 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்றார். இயேசு, 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்றார்'' (லூக்கா 10:36-37)

உற்றார் உறவினருக்கு ஒரு நீதி, அன்னியருக்கு வேறொரு நீதி என்னும் முறை பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகிறது. அதுபோலவே நண்பர்களோடு ஓர் உறவு, பகைவரோடு வேறு உறவு என்பதும் வழக்கமாக உள்ளது. இது உலகப் பார்வை என்றால் இயேசு நமக்கு இதற்கு நேர் மாறான பார்வையை முன்வைக்கிறார். ''நல்ல சமாரியர்'' பற்றி இயேசு கூறிய கதையில் வருகின்ற பாத்திரங்களாகிய குருவும் லேவியரும் அக்கால யூத சிந்தனையைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் யூத சமய அனுசாரங்களைக் கடைப்பிடித்தவர்கள். கள்வர் கையில் அகப்பட்டுக் குற்றியிராகக் கிடந்த மனிதரைக் கண்டும் காணாததுபோலச் சென்றுவிடுகின்றனர் இந்த யூத சமயப் பணியாளர்கள். இவர்கள் சமய சம்பிரதாயத்தைக் காரணமாகக் காட்டி, இரக்கத்திற்கு முற்றுப்புள்ளி இட்டவர்கள். மேலும், இவர்கள் பிறப்பு வழியாகக் குருகுலத்தைச் சார்ந்தவர்கள். அதாவது, குருக்களின் குடும்பத்தில் பிறந்தவர் குருக்களாயினர். தூய்மை மற்றும் தீட்டு சம்பந்தமான பல சட்ட திட்டங்களை இவர்கள் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்ற சாதாரண மக்களிடமிருந்து பிரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். -- அந்த வழியே வந்த சமாரியர் ஒருவர் குற்றுயிராகக் கிடந்த மனிதன் மீது இரக்கம் கொள்கிறார். அவருடைய காயங்களைக் கட்டி, அவரைத் தூக்கித் தான் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனிக்க ஏற்பாடு செய்கிறார். இவ்வளவு அக்கறையோடு செயல்பட்ட சமாரியர் யார்? அவர் யூத குருவுமல்ல, லேவியரும் அல்ல, சாதாரண யூதரும் அல்ல. மாறாக, எல்லா யூதர்களாலும் தாழ்ந்தவர் எனக் கணிக்கப்பட்டவர் அந்த சமாரியர். அக்காலத்தில் சமாரியருக்கும் யூதர்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கவில்லை. அந்நிலையிலும் அந்த சமாரியர் குற்றுயிராகக் கிடந்த மனிதர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். இக்கதையைக் கூறிய இயேசு நமக்குப் புகட்டுகின்ற பாடம் என்ன? பிறர் மட்டில் நாம் அன்புகாட்ட வேண்டும் என்னும் கட்டளை ஒருசிலருக்கு நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும், பிறரை வேண்டுமானால் நாம் ஒதுக்கிவிடலாம் எனப் பொருள்படாது. மாறாக, நமக்கு ''அடுத்திருப்பவர்'' எல்லா மனிதர்களும் ஆவர். ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்ற கேள்விக்கு இயேசு தந்த பதில் ''அடுத்திருப்பவராக நீர் மாற வேண்டும் என்றால் எல்லா மனிதருக்கும் நீர் அன்பு காட்ட வேண்டும்'' என்பதாகும். இறுதியாக இயேசு திருச்சட்ட அறிஞரை நோக்கி, ''நீரும் போய் அப்படியே செய்யும்'' எனக் கூறினார். அதாவது, குருவும் லேவியரும் செய்ததைப் போலல்லாமல், அந்த சமாரியர் செய்தது போல நீரும் செய்யும் என இயேசு உரைத்தார். சமயச் சட்டங்களை அனுசரிப்பதாகக் கூறிவிட்டு, துன்பத்தில் வாடுவோருக்கு உதவி செய்யாவிட்டால் என்ன பயன்? இரக்க உள்ளம் நமக்கு வேண்டும் என்றும், சமய, சமூக சம்பிரதாயங்களையும் தாண்டிச் சென்று நாம் எல்லா மனிதர் மட்டிலும் அன்புடையோராய் வாழ வேண்டும் எனவும் இயேசு கற்பிக்கின்றார்.

மன்றாட்டு:
இறைவா, எல்லையற்ற அன்போடு எங்களை அரவணைக்கின்ற உம்மை நாங்கள் முன்மாதிரியாகக் கொண்டு அனைவரும் அன்புசெய்திட அருள்தாரும்.