பொதுக்காலம் - 27 ஆம் வாரம்

வியாழன் அக்டோபர் , 12.10.2012


முதல் வாசகம்



நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5

அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத்தான் முடியுமா? உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)

பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.

69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவுகூர்ந்தார். பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை. -- இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.