பொதுக்காலம் - 27 ஆம் வாரம்

சனி அக்டோபர் , 13.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 11: 28 - அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ``இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்' என்றார்'' (லூக்கா 11:28)

கடவுள் தாம் அன்புசெய்கின்ற உலகத்தோடு நெருங்கி உறவாட விழைகின்றார். எனவேதான் அவர் தம் மகன் இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவர் வழியாக மக்களுக்கு நற்செய்தி வழங்கினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசு கடவுளின் வார்த்தையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அந்த வார்த்தை வழியாக நாம் நம் வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்கிறோம். ஆனால் வார்த்தையைக் கேட்டுவிட்டு அதன்படி நாம் செயல்படாவிட்டால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. லூக்கா நற்செய்தியில் ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் பேறுபெற்றோர்'' என்னும் கருத்து பல இடங்களில் காணப்படுகிறது. ''எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'' என இயேசுவின் தாய் மரியா ஏற்கெனவே பறைசாற்றியிருந்தார் (காண்க: லூக் 1:48). கடவுள் அறிவித்த சொற்படியே நடக்கட்டும் எனத் தாழ்ச்சியோடு தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்திருந்தார் (லூக் 1:38). கடவுள் அறிவித்த செய்தி தன் வாழ்வில் நிறைவேறும் என நம்பியிருந்தார் (லூக் 1:45). இயேசுவும், ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்'' எனக் கூறியிருந்தார் (லூக் 8:21). கடவுளின் வார்த்தையைத் தன் வயிற்றில் சுமந்த மரியா உண்மையிலேயே பேறுபெற்றவர் என்னும் வாழ்த்து ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது (காண்க: லூக் 1:42). -- மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததால் நாம் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்துவது பொருத்தமே. இச்சிறப்பின் அடிப்படையாக இருப்பவர் இயேசுவே என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அவர் கடவுளுக்கு நிகராக இருந்தபோதிலும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து தமக்கு அளிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாக ஏற்றிருந்தார். ஆக, இயேசுவைத் தம் வயிற்றில் கருத்தாங்கி, பாலூட்டி அவரை வளர்த்து ஆளாக்கிய மரியா கடவுளின் பார்வையில் சிறப்பு மிக்கவர் ஆனார் என அறிந்து நாம் மகிழ்கின்றோம். இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதை நாம் கடைப்பிடித்து ஒழுகவும் வேண்டும். அப்போது அந்த வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் துலங்கி மிளிரும்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தில் பேசுகின்ற உம்மை நாங்கள் திறந்த மனத்தோடு ஏற்று, உம் வார்த்தையின்படி வாழ்ந்திட அருள்தாரும்.