பொதுக்காலம் - 28 ஆம் வாரம்

திங்கள் அக்டோபர் , 15.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 22-24, 26-27, 31 - 5: 1

சகோதரர் சகோதரிகளே, ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப் பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது. மேலே உள்ள எருசலேமோ உரிமைப் பெண்; நமக்கு அன்னை. ஏனெனில், ``பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளை விட ஏராளமானவர்கள்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆகவே சகோதரர் சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 113: 1-2. 3-4. 5ய,6-7 (பல்லவி: 2)

பல்லவி: ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக!

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப்பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5ய நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; 7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 95: 8b,7b - அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


"இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!... இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!" (மத்தேயு 12:41-42)

இயேசு தம்மை யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் ஒப்பிட்டுப் பேசியதோடு அவர்களைவிடத் தம்மைப் பெரியவராகக் காட்டுகிறார். விவிலிய வரலாற்றில் யோனாவுக்குச் சிறப்பிடம் உண்டு. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கு எவ்வளவோ முயன்றார் யோனா. ஆனால் கடவுள் அவரை விடவில்லை. யோனாவைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அவரை நினிவே நகருக்கு அனுப்பி அங்கிருந்த பிற இன மக்கள் கடவுளிடம் திரும்பிவர யோனா ஒரு கருவியாகச் செயல்பட்டார். சாலமோன் மன்னர் தலைசிறந்த ஞானியாகப் போற்றப்பெறுபவர். அவருடைய ஞானம் மிகுந்த சொற்களைக் கேட்க வெகுதொலையிலிருந்து மக்கள் வந்தனர். இந்த இருவரோடும் இயேசு தம்மை ஒப்பிட்டது எதற்காக? இயேசு கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் அனைவரையும்விட தலைசிறந்த இறைவாக்கினர். ஏனென்றால் அவர் கடவுளின் செய்தியை, கடவுளாட்சி பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தார். மேலும், இயேசு இவ்வுலகில் தோன்றிய ஞானியர் அனைவரையும் விஞ்சியவர். ஏனென்றால் அவர் இவ்வுலக ஞானத்தையல்ல, கடவுளின் ஞானத்தை நமக்கு அறிவித்தார். -- கடவுளின்ஞானம் மனிதருக்கு மடமையாகப் படலாம். கடவுளின் அழைப்பு மனிதருக்கு முரணாகத் தெரியலாம். ஆனால், திறந்த உள்ளத்தோடு கடவுளை நாம் அணுகிச் சென்றால் அவருடைய குரலை நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் கேட்க முடியும். அதுபோல, கடவுளின் ஆவியால் நாம் நடத்தப்பட்டால் அவருடைய ஞானத்தில் நமக்கும் பங்குண்டு. ஒப்புயர்வற்ற இறைவாக்கினரும் ஞானியுமாகிய இயேசுவைப் பின்செல்வோர் இறைவாக்கினை ஏற்று, கடவுளின் ஞானத்தைப் பெற்ற மனிதராக வாழ வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, நீர் எங்களுக்கு அளித்துள்ள இறைவாக்குப் பணியை நாங்கள் ஞானத்துடன் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.