பொதுக்காலம் - 29 ஆம் வாரம்

திங்கள் அக்டோபர் , 22.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம். ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாய் இருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! 5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 15: 26b,27ய - அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்' என்றார்'' (லூக்கா 12:10)

தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது. -- துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.

மன்றாட்டு:
இறைவா, உம் தூய ஆவியால் வழிநடத்தப்பட எங்களையே காணிக்கையாக்க அருள்தாரும்.