பொதுக்காலம் - 30 ஆம் வாரம்

திங்கள் அக்டோபர் , 29.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32 5: 1-8

ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். பரத்தைமை, அனைத்து ஒழுக்கக்கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும். ஏனெனில் பரத்தைமையில் ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 1:1-4 6

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். 4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். பல்லவி

5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


எசே 33: 11 - அல்லேலூயா, அல்லேலூயா! நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:10-17

10 ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். 11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். 12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, 13 தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்" என்றார். 15 ஆண்டவரோ அவரைப் பார்த்து, "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ? 16 பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?" என்று கேட்டார். 17 அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 13:16)

பதினெட்டு ஆண்டுகள் என்பது இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுள் காலத்தில் பாதி. அத்துணை நீண்டகாலமாகக் கூன் விழுந்த நிலையில் இருந்த பெண் குணமடைந்த நிகழ்ச்சியை லூக்கா மட்டுமே பதிவுசெய்துள்ளார். அவரால் ''சிறிதும் நிமிர முடியவில்லை'' (லூக் 13:11). கூன் விழுந்த மனிதர் பிற மனிதரை முகமுகமாகக் கண்டு, நேருக்கு நேர் நின்று அவர்களோடு உரையாட இயலாது. அவர்களுடைய கண்கள் எப்பொழுதும் தரையை நோக்கியே இருக்கும். மிகுந்த சிரமப்பட்டு ஒருவேளை பக்கவாட்டில் மட்டுமே அவர்களால் பிற மனிதர்களைப் பார்க்க இயலும். இவ்வாறு ஊனமுற்ற நிலையில் இருந்த பெண் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒருவர். அவரை யாரும் மதிப்போடு பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இயேசுவின் கண்கள் அப்பெண்ணைக் கண்டுகொள்கின்றன. ஊனமுற்றிருந்து அப்பெண்ணைப் பார்த்ததும் இயேசு அவரைத் தம் அருகே கூப்பிடுகிறார். அருகில் வந்த பெண்ணை நேருக்கு நேர் பார்க்கும் விதத்தில் ஒருவேளை இயேசுகூட குனிந்திருப்பார். ''அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறி இயேசு ''தம் கைகளை அவர்மீது வைத்தார்''. உடனே அப்பெண் ''நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 13:12-13). கூன் விழுந்திருந்தவர் இப்போது ''நிமிர்ந்து'' நிற்கிறார். சமுதாயத்தின் ஒடுக்குமுறைகள் மக்களைக் ''கூனிக் குறுகி'' நிற்கும் நிலைக்குத் தள்ளவிட்டாலும் கடவுள் அம்மனிதர்களை ''நிமிர்ந்து'' நிற்கச் செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை இங்கே காண்கிறோம். நிமிர்ந்து நிற்கும் திறனைக் கடவுளின் அருளால் பெற்றுக்கொண்ட அப்பெண் ''கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 13:13). -- இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தொழுகைக் கூடத் தலைவர் ''கோபம் கொண்டார்''. யாரும் குணம் பெறும் நோக்குடன் ஓய்வுநாளில் வரக் கூடாது என்பது அவர் கருத்து (லூக் 13:14). ஆனால் இயேசு அக்கருத்தை மறுக்கின்றார்; அது தவறு எனக் காட்டுகின்றார். ஆடு மாடுகளைக் கட்டவிழ்த்துத் தண்ணீர் காட்டுவது ஓய்வு நாளில் நிகழலாம் என்றால் பதினெட்டு ஆண்டுகளாகக் கட்டுண்ட நிலையில் ஊனமுற்று, கூன் விழுந்து வாழ்ந்த அப்பெண்ணின் கட்டை அவிழ்ப்பது ஓய்வு நாளில் நிகழ்வது முறையில்லையா என இயேசு கேட்கிறார். இயேசு அப்பெண்ணை ஓய்வுநாளில் விடுதலை செய்தல் முறையல்ல என்று கருதுவதே தவறு. மாறாக, ஓய்வுநாளில் அப்பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்பதே சரி என இயேசு காட்டுகின்றார். ஓய்வுநாள் மனிதரின் விடுதலை நாள். கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நாள். கடவுள் மனிதர் சுதந்திர உணர்வோடு தம்மை அணுகி வந்து வழிபட வேண்டும் என விரும்புகிறார். ஆகவே, மனிதருக்கு விடுதலை வழங்க வந்த இயேசு ஓய்வுநாளில் அந்த விடுதலையை வழங்கியது பொருத்தம் தான். இன்று வாழ்கின்ற நமக்கும் இச்செய்தி வழங்கப்படுகிறது. சமுதாயத்தின் அநீதியான வழக்கங்கள் மனிதரைக் கூனிக் குறுகச் செய்யும்போது அந்த அடிமைத் தளைகளிலிருந்து அவர்களை விடுவிக்க நாம் என்ன செய்கிறோம்?

மன்றாட்டு:
இறைவா, எங்களை ஒடுக்குகின்ற அடிமைத் தளைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று, சுதந்திர உணர்வோடு உம்மைப் புகழ்ந்திட அருள்தாரும்.