பொதுக்காலம் - 30 ஆம் வாரம்

சனி அக்டோபர் , 03.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26

சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 42: 1. 2. 4

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? பல்லவி

4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வா சகம் 14: 1,7-11

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11)

கடவுளாட்சியை மக்களுக்கு அறிவித்த இயேசு உலகப் பார்வையில் அமைந்த மதிப்பீடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். எனவே அவருடைய போதனை புரட்சிகரமானதாக இருந்தது. அந்தப் புரட்சி அரசியல் புரட்சியோ சமுதாயப் புரட்சியோ அல்ல; மாறாக, ஒரு வேரோட்டமான ஆன்மிகப் புரட்சி. அதன் விளைவாக மனித சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றும், மனித உறவுகள் அன்பையும் நீதியையும் அடித்தளமாகக் கொண்டு எழ வேண்டும் என்றும் இயேசு போதித்தார். உலகக் கணிப்புப்படி, யார் யார் தம்மை உயர்த்துகிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தாழ்நிலையில் உள்ளோர் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் பார்வை வேறு. தாழ்ச்சி என்னும் நற்பண்பு நமக்கு வேண்டும் என அவர் கற்பித்தார். அப்பண்பு நம்மிடம் இருந்தால் நம்மையே உயர்ந்தவர்களாகக் கருதவோ பிறரைத் தாழ்ந்தவர்களாகக் கணிக்கவோ நாம் முற்பட மாட்டோம். உயர்வும் தாழ்வும் மனிதப் பார்வையில் எழுவது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே. -- ஆனால் பதவி, அந்தஸ்து போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்தி, உயர்;ந்தோருக்கு முதலிடம் தாழ்ந்தோருக்குக்குக் கடைசி இடம் எனச் சட்டங்கள் வகுக்கின்ற மனிதர்கள் கடவுளின் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். மனித மதிப்பீடுகளைக் கடவுள் புரட்டிப் போடுவதை லூக்கா ஏற்கெனவே பதிவுசெய்தார். எடுத்துக்காட்டாகக் காண்க: லூக் 1:51-53. அங்கே மரியா கடவுளின் அரும் செயல்களை வியந்து பாடியபோது, ''வலியேரரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனப் பறைசாற்றுகின்றார். உண்மையான தாழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது? இப்போது பணிந்து போனால் பிறகு உயர்வடைவோம் என்னும் எதிர்பார்ப்போடு செயல்படுவது உண்மையான தாழ்ச்சி அல்ல. மாறாக, தற்புகழ்ச்சி என்பது கடவுளின் முன்னிலையில் எல்லா மனிதரும் சமம் என்னும் உண்மைக்கு எதிராகப் போவதை நாம் உணர்வதும், நம்மைத் தேடி வந்த கடவுள் தம்மையே தாழ்த்திக் கொண்டு நம்மோடு தம்மை ஒன்றுபடுத்திய கடவுள் என்பதைக் கருத்தில் கொள்வதும் இன்றியமையாதது. அப்போது கடவுள் செயல்படுகின்ற விதத்தில் நாமும் செயல்படுவோம். அதாவது, மனிதரிடையே பாகுபாடுகள் கற்பிக்காமல், அனைவரும் மாண்பு மிக்கவர்களே என்னும் தத்துவத்தின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் உருவாகிட நாமும் மனமுவந்து உழைப்போம்.

மன்றாட்டு:
இறைவா, எங்களை வேறுபாடின்றி அன்புசெய்கின்ற உம் இரக்கத்தை வியந்து போற்றிட அருள்தாரும்.