பொதுக்காலம் - 31 ஆம் வாரம்

திங்கள் அக்டோபர் , 05.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 131: 1. 2. 3

பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 8: 31b-32 - அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11)

கடவுளாட்சியை மக்களுக்கு அறிவித்த இயேசு உலகப் பார்வையில் அமைந்த மதிப்பீடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். எனவே அவருடைய போதனை புரட்சிகரமானதாக இருந்தது. அந்தப் புரட்சி அரசியல் புரட்சியோ சமுதாயப் புரட்சியோ அல்ல; மாறாக, ஒரு வேரோட்டமான ஆன்மிகப் புரட்சி. அதன் விளைவாக மனித சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றும், மனித உறவுகள் அன்பையும் நீதியையும் அடித்தளமாகக் கொண்டு எழ வேண்டும் என்றும் இயேசு போதித்தார். உலகக் கணிப்புப்படி, யார் யார் தம்மை உயர்த்துகிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தாழ்நிலையில் உள்ளோர் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் பார்வை வேறு. தாழ்ச்சி என்னும் நற்பண்பு நமக்கு வேண்டும் என அவர் கற்பித்தார். அப்பண்பு நம்மிடம் இருந்தால் நம்மையே உயர்ந்தவர்களாகக் கருதவோ பிறரைத் தாழ்ந்தவர்களாகக் கணிக்கவோ நாம் முற்பட மாட்டோம். உயர்வும் தாழ்வும் மனிதப் பார்வையில் எழுவது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே. -- ஆனால் பதவி, அந்தஸ்து போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்தி, உயர்;ந்தோருக்கு முதலிடம் தாழ்ந்தோருக்குக்குக் கடைசி இடம் எனச் சட்டங்கள் வகுக்கின்ற மனிதர்கள் கடவுளின் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். மனித மதிப்பீடுகளைக் கடவுள் புரட்டிப் போடுவதை லூக்கா ஏற்கெனவே பதிவுசெய்தார். எடுத்துக்காட்டாகக் காண்க: லூக் 1:51-53. அங்கே மரியா கடவுளின் அரும் செயல்களை வியந்து பாடியபோது, ''வலியேரரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனப் பறைசாற்றுகின்றார். உண்மையான தாழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது? இப்போது பணிந்து போனால் பிறகு உயர்வடைவோம் என்னும் எதிர்பார்ப்போடு செயல்படுவது உண்மையான தாழ்ச்சி அல்ல. மாறாக, தற்புகழ்ச்சி என்பது கடவுளின் முன்னிலையில் எல்லா மனிதரும் சமம் என்னும் உண்மைக்கு எதிராகப் போவதை நாம் உணர்வதும், நம்மைத் தேடி வந்த கடவுள் தம்மையே தாழ்த்திக் கொண்டு நம்மோடு தம்மை ஒன்றுபடுத்திய கடவுள் என்பதைக் கருத்தில் கொள்வதும் இன்றியமையாதது. அப்போது கடவுள் செயல்படுகின்ற விதத்தில் நாமும் செயல்படுவோம். அதாவது, மனிதரிடையே பாகுபாடுகள் கற்பிக்காமல், அனைவரும் மாண்பு மிக்கவர்களே என்னும் தத்துவத்தின் அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் உருவாகிட நாமும் மனமுவந்து உழைப்போம்.

மன்றாட்டு:
இறைவா, எங்களை வேறுபாடின்றி அன்புசெய்கின்ற உம் இரக்கத்தை வியந்து போற்றிட அருள்தாரும்.